மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

துணிச்சல் இல்லாத அரசு : துரைமுருகன்

துணிச்சல் இல்லாத அரசு : துரைமுருகன்

காவிரி விவகாரம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் தமிழக அரசுக்கு இல்லை என்று குற்றம் சாட்டினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் இதுவரை மத்திய அரசு அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடைசி நேரத்தில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று (மார்ச் 29) முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்.

கோட்டூர்புரத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கெடு முடியும் நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுவதால் என்ன ஆகப் போகிறது. அதனால் எந்தப் பலனும் இல்லை. இதற்கு முன்பு வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழக அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் சந்திக்க மறுக்கிறார் என்றால் முதல்வரும், துணை முதல்வரும் டெல்லியில் சென்று பிரதமரைச் சந்தித்து

முறையிட்டிருக்கலாமே,தீர்ப்பில் கூறப்பட்டுள்ள "ஸ்கீம்" குறித்து கடைசி நேரத்தில் தான் மத்திய அரசு விளக்கம் கேட்குமா, நாடாளுமன்றத்தில் போராடும் 50அதிமுக எம்.பி.க்களும் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கலாமே? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை துரைமுருகன் எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, "பிரதமரைச் சந்தித்து முறையிட்டு மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் இங்கு சந்திப்பே நடக்கவில்லையே என்று வேதனைத் தெரிவித்த துரைமுருகன் மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது. எனவே மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை என்றும், இதனால்தான் ஆளுநரை மாவட்டந்தோறும் ஆய்வு செய்யக் கூறியுள்ளனர். தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்" என்றும் கூறினார்.

மேலும் காவிரி பிரச்சனையில் இந்த நிலைக்கு காரணம் மத்திய அரசும், மாநில அரசும்தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon