மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

மீண்டும் வருகிறாள் வாசுகி

மீண்டும் வருகிறாள் வாசுகி

தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக புதிய படங்கள் எதுவும் வெளியாகாததால் நயன்தாராவின் 'வாசுகி' படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக அறம், வேலைக்காரன் போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் மற்றும் சயிரா படங்களில் நடித்துவருகிறார். தற்போது நடைபெற்றுவரும் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மார்ச் 1ஆம் தேதியிலிருந்து புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் பழைய படங்களையும் டப்பிங் படங்களையும் மட்டுமே தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

இதனால் ரசிகர்கள் கூட்டம் போதிய அளவில் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தனது நடிப்பால் ஹிட் படங்களைக் கொடுத்துவருகிறார் நயன்தாரா. இதனால் இவருடைய படங்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே தற்போது புதிய படங்கள் வெளியாகாததால் நயன்தாராவின் 'வாசுகி' படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப் படம் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் நாளை (மார்ச் 30) வெளியாகிறது.

மலையாளத்தில் வெளியான 'புதிய நியமம்' என்ற படத்தையே 'வாசுகி' என்ற தலைப்பில் தமிழில் டப் செய்து வெளியிட்டனர். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று நபர்களைப் பழிவாங்கும் கதையாக இது அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் மம்மூட்டி, நயன்தாரா, ஷீலூ இப்ராஹிம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். புதிய படங்கள் வெளியாகாததால் இந்தப் படத்தை திரையரங்குகளில் நாளை முதல் வெளியிட உள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் பிரச்சினை நடந்துகொண்டிருக்கும்போது இந்தப் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சிலர் நயன்தாரா வீட்டின் முன்பு கூடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு நயன்தாரா தரப்பில், "வாசுகி படத்தை வெளியிடுவதற்கும் நயன்தாராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படத்தில் நயன்தாரா ஒரு நடிகை மட்டும்தான். இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளரிடமும், டப்பிங் உரிமையை வாங்கியவர்களிடமும், வெளியீட்டு உரிமையாளர்களிடமும்தான் கேட்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon