மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 ஜன 2021

சென்னை பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ.18.5 கோடி நிதி!

சென்னை பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ.18.5 கோடி நிதி!வெற்றிநடை போடும் தமிழகம்

சென்னை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் டெலி தெரபி மற்றும் ப்ராசி தெரபி பிரிவுகளைத் தொடங்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.18.5 கோடி நிதியளிப்பதாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தமிழ்நாடு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனை 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து செயல்பட்டுவருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளிலிருந்து உயர் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

புற்றுநோய், மூளையில் கட்டி, முதுகுத் தண்டுவட அறுவைசிகிச்சை போன்ற பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்காக, இங்கு நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. பல்வேறு துறைகளின் மருத்துவ நிபுணர்களும் பணியில் உள்ளனர்.

சென்னை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் டெலி தெரபி மற்றும் ப்ராசி தெரபி பிரிவுகளைத் தொடங்க, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.18.5 கோடி நிதியளிக்கவுள்ளதாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இது, மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு சமூக பொறுப்பு திட்டங்களில், இந்திய விமான நிலைய ஆணையம், அரசு பல்நோக்கு மருத்துவமனைக்காக ஒதுக்கும் அதிகபட்ச நிதியாகும். அம்மருத்துவமனையில் அமைக்கப்படும் புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவில், இன்னும் 36 வாரங்களில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மருத்துவ உபகரணங்கள் புற்றுநோய்க்கு எதிராகப் போராட, புற்றுநோய் சிகிச்சைக்கு பெரிதும் துணைபுரியும்.

மேலும், இந்த அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றில் புற்றுநோய் பிரிவிற்கு மட்டும் 114 படுக்கைகள் இருக்கின்றன. இம்மருத்துவமனையில் தொடங்கப்படும் புற்றுநோய் சிறப்பு பிரிவு புற்றுநோய் பாதித்தவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். 80%க்கும் அதிகமான பொதுமக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள காரணத்தால் இம்மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon