மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

இந்தியா - சீனா வர்த்தக மேம்பாடு!

இந்தியா - சீனா வர்த்தக மேம்பாடு!

அதிகரித்துவரும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர சீனா உறுதியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015-16 நிதியாண்டில் இந்தியா மற்றும் சீனா நாடுகளிடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பு 70.17 பில்லியன் டாலராக இருந்தது. 2016-17ஆம் நிதியாண்டில் அது 71.42 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதேபோல இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை 2015-16 நிதியாண்டில் 52.69 பில்லியன் டாலரிலிருந்து 2016-17 நிதியாண்டில் 51 பில்லியன் டாலராகக் குறைந்திருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 36.73 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டுவரச் சீனா மற்றும் இந்தியா இடையே தொழில் சார் கூட்டங்கள் நடத்தவும், வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடவும் சீனா உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு பேசுகையில், “அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்தும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள வித்தியாசங்கள் குறித்தும் சீன வர்த்தக அமைச்சர் ஜோங் ஷானிடம் ஒரு கூட்டத்தில் விவாதித்தோம். அவர் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக வர்த்தகப் பற்றாக்குறையைச் சீராக வைத்திருக்கச் சீனா சார்பாக உறுதியளித்துள்ளார். இந்தியாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யவும் சீனா உறுதியளித்துள்ளது. இந்தியாவின் வேளாண் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் சில உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை அமைத்துத் தர சீனா முன்வந்துள்ளது. அதற்காகச் சில தொழில் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கத் தொழில் மையங்கள் அமைக்கவும் சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளச் சீனா உறுதியளித்திருப்பது இதுவே முதல் முறை” என்று கூறினார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon