மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 14 டிச 2019

காவிரி: துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!

காவிரி: துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு புதிதாக மனு தாக்கல் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது மத்திய அரசின் கடைந்தெடுத்த மோசடி என்று குற்றம்சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா மாநில அரசு, முதலில் ஆறு வார காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்றது. அதன்பின், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திட்டம் (Scheme) என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று அர்த்தமில்லை என்றும் வலியுறுத்தியது. இதற்கு, தமிழக அரசும் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இன்றுடன் (மார்ச் 29) காவிரி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடையும் நிலையில், தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு நாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதில், நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள திட்டம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதனை, தீர்ப்பின் 216 முதல் 236 வரை நீளும் எட்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்பதே தமிழகத்தின் கோரிக்கையாக இருந்து வந்ததென்றும் கூறியுள்ளார்.

”இதில் ஏதேனும் ஐயம் இருந்தாலும் கூட, தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்க முடியும். ஆனால், ஆறு வாரங்கள் அமைதியாக இருந்து விட்டு, இப்போது உச்ச நீதிமன்றத்தை அணுகுவது நம்பவைத்து கழுத்தை அறுக்கும் செயலாகத்தானே இருக்க முடியும்.

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கு அரசியல் லாபம் தேடும் நோக்குடன் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பாரதிய ஜனதா அரசு மறுக்கிறது. அதேநேரத்தில் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான், இப்போது விளக்கம் கேட்கும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டியது காவிரி மேலாண்மை வாரியமா? ஸ்கீமா? என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்தக் குழப்பமும் இல்லை; இவ்விஷயத்தில் மத்திய அரசு கடைபிடிப்பது காலம் கடத்தும் அணுகுமுறை தான் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைக் கூற முடியும்” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றே விளக்கமளித்ததாகவும், அதற்கு முன்னர் அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாகப் பேசியபோதும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையையே பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

”கடைசியாக நேற்று முன்தினம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த உபேந்திர பிரசாத்சிங், ‘‘காவிரி ஸ்கீம் என்பதும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்று தான்’’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அடுத்த 2 நாட்களுக்குள் எல்லா தெளிவும் விலகி, குழப்பம் சூழ்ந்துவிட்டதைப் போல உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப் போவதாக மத்திய அரசு கூறுவதைப் பார்க்கும் போது, ‘‘நல்ல நாடகம் நடக்குது’’ என்பதை உணர்ந்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்க மத்திய ஆட்சியாளர்கள் முயலக்கூடும் என்பதால், மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பதும், துரோகம் செய்கிறது என்பதும் நன்றாகத் தெரிந்தும் அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக சொல்லிக் கொடுக்கப்பட்ட கிளிப்பிள்ளையைப் போல, ‘‘உச்ச நீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடியும் வரை காத்திருப்போம்’’ என்பதையே மீண்டும், மீண்டும் கூறி வந்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாம் என்ற யோசனை அவர்களின் காதுகளில் விழவில்லை.

உச்ச நீதிமன்றம் விதித்தக் கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் நாளைக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விட்டு அமைதியாக ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். இவர்கள் தான் தமிழகத்தின் சாபம்” என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

காவிரிப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்வதைக் கைவிட்டு, இன்று இரவுடன் உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைவதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon