மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

10, +2: தனியார் பள்ளிகளின் தேர்வு அறை முறைகேடுகள்!

10, +2:  தனியார் பள்ளிகளின் தேர்வு அறை முறைகேடுகள்!

10 மற்றும் 12ஆவது வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. தனியார் பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகமான மதிப்பெண் எடுக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் உதவி செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 16இல் தொடங்கப்பட்டு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 3,609 மையங்களில் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வு எழுதிவருகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மற்றும் தனித் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 அன்று முடிவடைகிறது. 2,794 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்வு எழுதிவருகிறார்கள். தேர்வுப் பணியில் ஆசிரியர்கள், மையக் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஸ்டாண்டிங் ஸ்க்வாடு, பறக்கும் படை எனச் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.

அரசுப் பள்ளியில் உள்ள மையங்களில் எழுதும் மாணவர்களுக்கு நெருக்கடிகள் அதிகம். ஆனால், தனியார் பள்ளிகளில் எழுதும் தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க ஆசிரியர்களும் அதிகாரிகளும் உதவி செய்கிறார்கள் என்றும், அதற்குக் கைமாறாகத் தேர்வு மையக் கண்காணிப்பாளர்களைத் தனியார் பள்ளி நிர்வாகம் பலமாக ‘கவனித்து’வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஏதோ மாணவர்களுக்கு மட்டும் சாதகமான விஷயம் அல்ல... இந்த வருடம் ரிசல்ட் அதிகம் காட்டினால் அதை வைத்தே அடுத்த கல்வி ஆண்டுக்கான டொனேஷனை அதிகப்படுத்திவிடலாம் என்ற தனியார் பள்ளிகளின் தன்முனைப்பு காரணமாகத்தான், இப்படித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முறைகேடான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.

கடலூர் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிவரும் மாணவியிடம் தேர்வு மையத்தைப் பற்றிக் கேட்டோம்.

“தேர்வு மையத்துக்குள் போகும்போது ஷூ, சாக்ஸ், பை அனைத்தும் வெளியில் வைத்துவிட்டு ஸ்கேல், பேனா, பென்சில் மட்டும் எடுத்துச் செல்வோம். மற்றபடி எங்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை. மையத்துக்குள்ளும் யாரும் வரவில்லை. நீங்கள் சொல்வதுபோல் எந்தப் படையும் வரவில்லை. வெளியில் வராண்டாவில்தான் இரண்டு பேர் (ஸ்டாண்டிங் ஸ்க்வாடு) நின்றிருந்தார்கள். காம்பவுண்டுக்கு வெளியில் போலீஸ் பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள்” என்று யதார்த்தமாகப் பேசிய மாணவிடம், “படிக்காத மாணவர்களைத் தேர்ச்சி பெறவைக்க உங்கள் பள்ளி ஆசிரியர்கள் உதவி செய்கிறார்களா?” என்று கேட்டோம்.

“அது இனிமேதான் தெரியும். கணக்கு, அறிவியல் தேர்வில் பெரிய அளவில் கெடுபிடி எதுவும் இல்லை” என்றார்.

நாம் விசாரித்த தனியார் பள்ளி தேர்வு மையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் கேட்டோம்.

“தேர்வு அறைக்கு முழுமையாகப் பரிசோதனை செய்து பிறகுதான் உள்ளே அனுப்பவார்கள், அதில்லாமல் இரண்டு பேர் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். பறக்கும் படையினர் வருவார்கள். உள்ளே புகுந்து மாணவர்களைப் பரிசோதனைகள் செய்துவிட்டுப் போவார்கள்” என்றார்.

கடலூர் மாவட்டம் எல்லை முடிவில் தொழுதூர் பக்கம் இருக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், “வினாத்தாள் எப்படியிருக்கிறது? கண்காணிப்பு படையினர் வந்து தொல்லைகள் கொடுக்கிறார்களா?” என்று விசாரித்தோம்.

“எங்கள் ஸ்கூல் மாணவர்கள் ஆல் பாஸ். எங்கள் ஸ்கூலுக்கு எந்த ஸ்க்வாடும் வராது. ஸ்டாண்டிங் ஸ்க்வாடும் உள்ளே வந்து பரிசோதனை செய்ய மாட்டார்கள். உள்ளே இருப்பவர்கள் நல்லா ஹெல்ப் பண்ணுவார்கள். எங்கள் ஸ்கூல் ரொம்ப சூப்பர்” என்றார் உற்சாகமாக.

நிதானமாக வரும் பறக்கும் படை

தேர்வுப் பணியிலிருக்கும் அதிகாரிகளிடம், “பறக்கும் படை அரசுப் பள்ளி மையங்களுக்குத்தான் போகுமா? தனியார் பள்ளி மையத்துக்குப் போக மாட்டார்களா?’’ என்று கேட்டோம்.

“பெயருக்குத்தான் பறக்கும் படை என்று சொல்வார்கள், அவர்கள் விரைந்து செல்வதற்கு வாகன வசதிகள் இல்லை. நாங்கள் வருவதைப் பார்த்துத் தனியார் பள்ளி மையங்களில் உஷாராகி விடுவார்கள். நாங்கள் சும்மா போயிட்டு திரும்பிடுவோம்” என்றவர், “தமிழகத்தில் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தானே” என்றார்.

அரசுப் பள்ளியில் கை நிறையச் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் காலையிலும் மாலையிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள் என்று திமுக மாணவர் அணி கடலூர் மாவட்ட அமைப்பாளர் நடராஜன் சொல்கிறார்.

“அது போக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களிலும் 10ஆவது, 12ஆவது மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுத்துவருகிறார்கள். தமிழகம் முழுவதும் இதே நிலைதான்” என்றவர், “தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் தேர்வு நேரங்களில் கண்காணிப்பாளர்களாக வருவார்கள். அவர்கள் மூலமாக மையத்தின் கண்காணிப்பாளர்களைக் கவனித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருப்பார்கள். தனியார் பள்ளிகள் அதிகமான சதவிகிதம் எடுக்க இதுதான் முக்கியக் காரணம்” என்றார்.

கல்வித் துறையின் தேர்வாணையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். “எங்களுக்கு எதுவும் தெரியாது. 09444203690 எண்ணுக்குத் தொடர்புகொண்டால் அனைத்துத் தகவல்களையும் பெறலாம்”என்ற பதில் வந்தது.

நாம் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு தமிழகம் முழுவதும் எத்தனை தேர்வு மையங்கள் என்று கேட்டதும் 044 28272088ஐத் தொடர்புகொண்டு இயக்குநர் வசந்திதேவிக்கு இணைப்பு கொடுக்கச் சொல்லிப் பேசுங்கள் என்றார்.

அவர் அளித்த எண்களுக்கு (28272088, 28269982, 28275126) தொடர்புகொண்டால் மணி அடிக்கிறது. எடுத்து யாரும் பதில் சொல்லவில்லை.

தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் விலாவரியாகப் பல விஷயங்களைப் புட்டுவைத்தார்.

“தமிழகத்தில் 75% சதவிகிதம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் பாடம் நடத்திவருகிறார்கள் அவர்களுக்கு பேக்கேஜ் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம். சிலருக்கு மாதம் சம்பளம் போல் கொடுத்துவிடுவோம். காலையில் 2 மணி நேரம் மாலை 4 மணி நேரம் வகுப்பு எடுப்பார்கள். இரண்டு வருடம் முன்புதான் ஒரு ஜிஓ கொண்டு வந்தார்கள். தேர்வு எழுதும்போது அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் யாரும் வரக் கூடாது என்று.

அதனால், அவர்கள் வராமலே அந்த மையத்துக்கு வரும் அதிகாரிகளே மாணவர்களைக் கவனித்துக்கொள்வார்கள். அந்த மையத்தின் அதிகாரிக்குப் பலமாகக் கொடுத்துவிடுவோம். அவர்கள் விரும்பும் உணவுகள், ஜூஸ், டீ எல்லாம் வாங்கிக்கொடுத்து, இரவு அறை போட்டுக் கொடுத்து மதுபானமும் வாங்கிகொடுப்போம். இது ஒன்றும் புதுசு அல்ல” என்றார்.

கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் விளக்கம் கேட்க அவரது அலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். அவரது உதவியாளர் சபேசன் பேசினார். நாம் விஷயத்தைச் சொல்லி, அமைச்சரிடம் பேச வேண்டும் என்று சொன்னதும், “அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது” என்று அவரே அமைச்சராக மாறி பதிலையும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

-காசி

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon