மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

முடிகிறது காலக்கெடு: முதல்வர் ஆலோசனை!

முடிகிறது காலக்கெடு: முதல்வர் ஆலோசனை!

காவிரி விவகாரத்தில் இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஒரு நாளே மீதமுள்ள நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்றே முதல்வரும், அமைச்சர்களும் பேட்டியளித்து வருகின்றனர்.

ஆனால், கர்நாடகத் தேர்தலை மனதில்வைத்துக் கொண்டுதான் மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று எங்கும் குறிப்பிடவில்லை. ‘ஸ்கீம்’ என்றுதான் கூறியுள்ளனர். எனவே, காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் இன்றுடன் கால அவகாசம் முடிவடைய உள்ளதால், இதுகுறித்து இன்று (மார்ச் 29) காலை 10 மணியளவில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் நேற்றைய தினமே ஆலோசனை நடத்த இருந்தார். ஆனால், பல மூத்த அமைச்சர்கள் வெளி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்ததால் கூட்டம் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon