மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

வெளியேற்றப்பட்ட வீராங்கனை!

வெளியேற்றப்பட்ட வீராங்கனை!

இந்தியாவில் பெண்கள் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடர் முடிவடைந்த பின்னர் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரரான பூனம் ராட் இந்த அணியில் இடம்பெறவில்லை.

இந்தியாவில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான முத்தரப்பு டி-20 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தொடர் முடிவடைந்த பின்னர் இந்தியப் பெண்கள் அணியை எதிர்த்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி இதற்கான பயிற்சி ஆட்டம் நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 6, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நாக்பூரில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று முன்தினம் (மார்ச் 27) அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஒருநாள் தொடர்களில் விளையாடியது. அந்தப் போட்டிகளில் சரியாக விளையாடி ரன் சேர்க்கத் தவறிய தொடக்க வீராங்கனை பூனம் ராட் இந்தத் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக தயாளன் ஹேமலதா இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியில் தேவிகா வைத்யா மற்றும் ராஜேஸ்வரி கேயக்வாட் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜேஸ்வரி காயம் காரணத்தால் கடந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்த முறை அவர் தகுதி பெற்றுள்ளது இந்திய அணிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மிதாலி ராஜ் தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஹர்ம்ப்ரீத் கவுர், ஸ்மிர்தி மந்தானா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், தயாளன் ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா வைத்யா, ஜுவ்லன் கோஸ்வாணி, ஷிக்ஹா பாண்டே, பூஜா வச்டிராகர், எக்டா பிஷ்ட், பூனம் யாதவ், சுஸ்மா வர்மா மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் டி-20 தொடரில் சிறப்பாக விளையாடி இந்த வாய்ப்பைப் பெற்றார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon