மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீ விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீ விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள லட்டு தயாரிக்கும் பகுதியில் நேற்று (மார்ச் 28) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக தினமும் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த லட்டுகள் கோயிலில் இடப்புறம் ‘பூந்தி போட்டு’ என்ற இடத்தில் தயாரிக்கப்படுகிறது. 150 கேஸ் அடுப்புகள் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான இந்த அரங்கில், முதற்கட்டமாகப் பூந்தி தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.

இந்த நிலையில், பூந்தி தயாரிப்பின்போது நேற்று எதிர்பாராத வகையில் அடுப்பில் இருந்த நெருப்பு துகள் தரையில் விழுந்தது. இதனால், நெய் படர்ந்திருந்த கசடுகளில் தீ பரவத் தொடங்கியது. இதைக் கண்ட ஊழியர்கள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினர். அவ்வாறு வெளியேறும்போது ஊழியர்கள் 2 பேர் வழுக்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் தேவஸ்தானத்தின் அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்த திருமலை தீயணைப்புக் குழுவினர், நெருப்பை அணைத்தனர். தீ விபத்தின் காரணமாக லட்டு தயாரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு, “பூந்தி தயாரிப்புக்கூடம் சீர் செய்யப்பட்ட பின், மீண்டும் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கும்” எனத் தெரிவித்தார். முன்னதாக, நேற்று முன்தினம் உற்சவம் முடிந்து பூதேவி சிலையை எடுத்துச் செல்லும்போது தவறுதலாக கீழே விழுந்தது. ஆனால், அதற்குத் தேவஸ்தான நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பு பணியின்போது தீ விபத்து ஏற்பட்டது. அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மீண்டும் விபத்து நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon