மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: அம்மாவும் தொழிலாளிதான்!

சிறப்புக் கட்டுரை: அம்மாவும் தொழிலாளிதான்!

மதரா

சென்னை கலைக் கண்காட்சியில் கலைஞர்களின் அனுபவங்களும் வெளிப்பாடுகளும்

சென்னை அடையாற்றில் உள்ள ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெற்றுவரும் கலைக் கண்காட்சியில் சென்னை, கும்பகோணம் கல்லூரிகளின் ஆண்டு இறுதி மாணவர்களும் முதுகலை மாணவர்களுமே அதிக அளவில் பங்குபெற்றுள்ளனர். பாரம்பரியம் மிக்க சென்னை கவின் கலைக் கல்லூரியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது படிப்பை நிறைவு செய்வதாக மாணவர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது. கல்லூரியில் நான்கு ஆண்டுகளில் கற்கத் தவறிய பல பாடங்களை இந்தக் கண்காட்சிக்கான செயல்முறையில் அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டதாக மாணவர்கள் கூறினர். மாணவி சிந்துஜாவிடம் படைப்பு குறித்தும் அவரது அனுபவம் குறித்தும் பேசினோம்.

“சென்னை கவின் கலைக் கல்லூரியில் பெயின்டிங் துறையில் இளங்கலை படிப்பை நிறைவு செய்துள்ளேன். இதற்கு முன் எந்த ஒரு கண்காட்சியிலும் நான் பங்கெடுத்ததில்லை. ஆனால், இங்குதான் கலையின் அடிப்படையையே கற்றுக்கொண்டேன். ஓவியங்கள் வரைவதையும், சிற்பம் செய்வதையும் மட்டுமே கலை என்று நினைத்திருந்தேன். எனது பார்வையில் பெரிய மாற்றத்தை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தியுள்ளது. சாலையில் செல்லும்போது பாதாளச் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்களைக் கண்டும் காணாததுபோல் நான் நகர்ந்துவிடுவேன். அவர்கள் யார், ஒரு நாளுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் கூலி எவ்வளவு போன்ற எதைப் பற்றியும் நான் சிந்தித்ததில்லை. எங்களுக்குள் நடைபெற்ற விவாதங்கள் கல்லூரி கற்றுத்தராத பல விஷயங்களைக் கற்றுத்தந்தன. கொச்சியில் பதினைந்து நாள்கள் தங்கி சிறந்த ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகளைப் பார்த்ததும், எங்களது படைப்புகளைக் காட்சிக்கு வைப்பதற்காகச் செய்த பணிகளும் புதுமையானதாக இருந்தது” என்று மொத்த அனுபவத்தையும் சுருக்கமாக கூறினார்.

கண்காட்சியில் பங்கெடுத்த பலரிடம் அவர்களுடைய அனுபவம் குறித்துப் பேசியபோது, அவர்களும் கிட்டத்தட்ட இதே கருத்துகளைப் பிரதிபலித்தார்கள்.

கலை வடிவம் பெற்ற தொழில்கள்

33 மாணவர்கள் கடின உழைப்பைக்கோரும் பல தொழில்களைக் கலைப் படைப்பாக்கிக் காட்சிக்கு வைத்துள்ளனர். சிந்துஜா நலிவடைந்துவரும் நெசவாளர்களின் உழைப்பைத் தனது படைப்பின் மூலம் கௌரவித்துள்ளார். “தொழிலாளர்களின் உழைப்பை முன்னிறுத்தும் கண்காட்சி என்பதால் சக மாணவர்கள் பெரும்பாலும் தங்களது குடும்பத்தில் என்ன தொழில் செய்கிறார்களோ... அதை நோக்கியே தங்களது ஆய்வை மேற்கொண்டனர். சிலர் தங்களுக்குத் தெரிந்தவர்கள், சுற்றியுள்ளவர்களின் தொழில்களைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றனர். எனக்குப் பூர்வீகம் காஞ்சிபுரம். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்தோம். காஞ்சிபுரம் என்றாலே நெசவுத் தொழில்தான் பிரபலம். எங்கள் குடும்பத்தில் நெசவுத் தொழிலைத் தொடரவில்லை. என் அத்தையின் குடும்பம் இத்தொழிலில் ஈடுபட்டுவந்தது. அவர்களைச் சந்தித்துத் தகவல் பெறலாம் என முடிவெடுத்தேன். ஆனால், போதிய வருமானம் இல்லாமல் ஒரு வருடத்துக்கு முன்பே இந்தத் தொழிலைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறினர். ஒரு வாரம் அவர்கள் வீட்டுக்குச் சென்று தங்கி அந்த ஊரில் உள்ள பல நெசவாளர்களைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்தேன்” என்றார்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்பதே இத்தொழில் நலிவடைய முக்கியக் காரணம். “சொசைட்டி மூலமாகவே பெரும்பாலானோர் நெசவுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு பட்டுச் சேலையை உருவாக்கத் தோராயமாக இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் கூலி என்பது மிகக் குறைவு. பட்டு டிசைனை உருவாக்குவதற்கே நான்கு நாள்கள் ஆகும். அதை வெளியிலிருந்து ஆட்கள் வந்து செய்துகொடுக்கின்றனர். அவர்களுக்கான கூலியையும் இவர்களே தர வேண்டும். நடுத்தர வயதுக்கு மேலுள்ளவர்களே நெசவாளர்களாகத் தொடர்கின்றனர். இவர்களுக்குப் பின் அந்த வேலையைத் தொடர அவர்கள் குடும்பத்தில் ஆள் இல்லை. குறைவான வருமானமே கிடைப்பதால் நாளுக்கு நாள் நெசவுத் தொழில் அழிவைச் சந்தித்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரப் பட்டின் சிறப்பம்சமே மூன்று இழைகளை ஓரிழையாக நெய்து உருவாக்குவதுதான். தனித்தன்மையான வேலைப்பாடுகளுடன் ஒவ்வொரு சேலையும் ஒரு கைவினைப்பொருளாகவே உருவாகிறது. அதே நேரத்தில் அதிகப்படியான உடல் உழைப்பையும் குடும்பத்து நபர்களின் உழைப்பையும் ஒருசேர கோரி நிற்கும் தொழிலாகவும் இருக்கிறது. அதனால் சிந்துஜா குறிப்பிட்டதுபோல் தரப்படும் குறைவான கூலி போதுமானதாக இல்லை. கலை வேலைப்பாடுகளுடன் வண்ணமயமாக இந்தச் சேலையை உருவாக்கும் கலைஞர்களின் வாழ்வு அந்த அளவு பிரகாசமானதாக இல்லாமல் போகிறது.

“கள ஆய்வின் மூலம் கேட்டறிந்த நெசவாளர்களின் வாழ்க்கையை எவ்வாறு கலைப் படைப்பாக மாற்றினீர்கள்?” என்று சிந்துஜாவிடம் கேட்டபோது, “பட்டு என்றால் செல்வத்தின் குறியீடாகவே அன்றிலிருந்து இன்றுவரை பார்க்கப்பட்டு வருகிறது. தாங்கள் தயாரிக்கும் தரமான பட்டுச் சேலைகளைத் தாங்களே வாங்க முடியாத நெசவாளர்கள் இன்றும் உள்ளனர். எனவே பட்டுத் துணியில் பட்டு நூல்கொண்டு அவர்களை போர்ட்ரைட் செய்துள்ளேன். நான் வரைந்த இந்த நான்கு ஓவியங்களில் என் அத்தையின் ஓவியமும் இருக்கிறது. நான் பட்டு நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்களது கைப்பட அதை நீவி வாங்கிவந்து காட்சிக்கு வைத்துள்ளேன்” என்று கூறினார்.

தோசைக்கல் சொல்லும் வாழ்க்கை

அரங்கத்தின் ஒரு மூலையில் தோசைக்கல் தொங்கவிடப்பட்டிருந்தது. கீழே ஒரு நாளைக்கு இத்தனை தோசை, ஒரு வாரத்துக்கு இத்தனை தோசை, மாதத்துக்கு வருடத்துக்கு என்றெல்லாம் கணக்கு எழுதப்பட்டிருந்தது. அதன்கீழ்

சிந்துஜாவின் பெயர் இருப்பதைப் பார்த்து, “இது என்ன மாதிரியான படைப்பு? இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” எனக் கேட்டோம். “கலை என்றால் ஸ்டுடியோவில் படம் வரைவது, சிலை செய்வது என்றே நான்கு வருடங்கள் எண்ணிவந்தேன். எனக்கு அதைத் தவிர ஒன்றும் தெரியாது” என்று நம்மிடம் சொன்ன சிந்துஜா, இந்தக் கேள்விக்குத் தீர்க்கமாகப் பதிலளித்தார்.

“அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதையில் அம்மா தன் வாழ்நாளில் எவ்வளவு தோசை சுடுகிறார் என்பது குறித்து ஒரு பகுதி இடம்பெறும். பெண்களின் வாழ்வில் பெரும்பகுதி சமையலறையில் கழிவதைச் சொல்லும் உரையாடல் இது. இந்த விஷயத்தைக் கலையாக எப்படி மாற்றுவது என எங்களுக்குள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் எனது அம்மாவின் கணக்கை நான் எழுத முடிவெடுத்தேன். எதைக் காட்சிக்கு வைப்பாய் என்று கேட்டபோது, தோசைக்கல்லையே வைப்போம். அதுதான் பொருத்தமாக இருக்கும் எனக் கூறி அதையே செய்தேன்” என்றார் சிந்துஜா.

அம்மாவை எப்படி தொழிலாளர் என்ற வரையறைக்குள் கொண்டுவருவீர்கள், அவரது கடமைகளில் ஒன்றுதானே அது என விவாதம் சூடாகியிருக்கிறது. “அம்மா என்றால் புனிதம் எனக் கூறி அதற்குள் அடக்கிவிட முடியாது. அதுவும் பெரும் உழைப்பைக் கோரியுள்ள தொழில்தான் என நான் கூறினேன். அதையே இங்கு காட்சிக்கு வைத்துள்ளேன்” என்று சிந்துஜா விளக்கினார்.

நமக்குள் உள்ள கற்பிதங்களை அடித்து நொறுக்கிப் புதிய பாதையைக் காட்டிய வரையும், பார்த்தலுக்கும் கவனித்தலுக்குமான வேறுபாட்டை உணரச் செய்து மனக் கண்ணைத் திறந்து வைத்த வரையும் நமது வாழ்வின் திருப்பம் ஏற்படுத்திய நபராகத்தானே நினைவில் வைத்திருப்போம். சிந்துஜாவைப் பொறுத்தவரை அது எந்தத் தனிநபரும் அல்ல. தனது கலைப் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக இந்தக் கண்காட்சியையே அவர் குறிப்பிடுகிறார். அவரது பேச்சின் வழியேயும் படைப்புகள் மூலமும் அதை நம்மாலும் உணர முடிந்தது.

(பிற மாணவர்களின் படைப்புகள், அனுபவங்கள் நாளை காலை 7 மணி பதிப்பில்)

உழைப்பைப் பேசும் கலைக் கண்காட்சி!

சென்னை கலைக் கண்காட்சி: யாருக்குச் சிலை வைப்பது?

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon