மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 மா 2018

நடராஜன் படத்திறப்பு: பொது நிகழ்ச்சியில் சசிகலா

நடராஜன் படத்திறப்பு: பொது நிகழ்ச்சியில் சசிகலா

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. சிபிஐ மூத்தத் தலைவர் நல்லகண்ணு படத்தைத் திறக்க முக்கியத் தலைவர்கள் பலரும் உரையாற்ற உள்ளனர்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன், கடந்த 20ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அதிமுகவினர் தவிர திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நடராஜன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை கொண்டு செல்லப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. கணவர் மறைவையடுத்து 15 நாள்கள் பரோலில் கடந்த 20ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, தஞ்சையில் தனது கணவரின் உடலைக் கண்டு கதறி அழுதார். தொடர்ந்து நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரேயுள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக சசிகலா, தஞ்சை அருளானந்தம் நகரிலுள்ள நடராஜன் இல்லத்தில் தங்கியுள்ளார். இதனால் தினகரனும் அங்கேயே உள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி நடைபெறும். பல்வேறு தலைவர்களும் இதில் கலந்துகொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

தினகரன் கூறியபடி நடராஜன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (மார்ச் 30) காலை 10 மணிக்குத் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையிலுள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தினகரன் வரவேற்புரையாற்ற உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடராஜன் உருவப்படத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லகண்ணு திறந்து வைக்கிறார்.

நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, சசிகலாவின் சகோதரர் திவாகரன் பெற்றுக்கொள்கிறார். நிகழ்வில் திமுக முன்னாள் எம்.பி எல்.கணேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தா.பாண்டியன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் நடராஜனுடனான தங்களது நினைவுகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

பரோல் விதிப்படி சசிகலா பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது. ஆனால், இது நடராஜன் குடும்பத்தினர் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சிதான். அதனால் சசிகலா நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு செல்லாமல் முதல் வரிசையில் அமர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் கவனிப்பார் என்று சொல்லப்படுகிறது.

கனவில் வரும் நடராஜன்

படத்திறப்பு நிகழ்ச்சிக்கான வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க சசிகலாவுக்குக் கணவர் இறந்த துக்கத்துக்கான தாக்கம் இன்னும் குறையவில்லையாம்.

இதுகுறித்து மன்னார்குடி வட்டாரங்களுக்கு நெருக்கமான தரப்பில் விசாரித்தபோது, “சிறையிலுள்ள சுதாகரனுக்குத் திருமணமானபோது வழக்குகள் ரூபத்தில் நிறைய சிக்கல்கள் வந்தன. தற்போது விவேக்குக்கு திருமணம் நடந்துள்ள நிலையில், கீர்த்தனா வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை... கட்சியில் குழப்பம், குடும்பத்தில் சண்டை, சிறைவாசம், உயிரிழப்பு என்று தொடர்ந்து நடந்துவருகிறது என்று சசிகலாவிடம் பெரிசுகள் ஏதேதோ கதைகள் சொல்ல அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஏதோ யோசித்தபடியே இருக்கிறார் சசிகலா.

நடராஜன் சசிகலாவை விட்டுப் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் சசிகலாவுக்கு அனைத்து ஆலோசனைகளும் கூறுவது நடராஜன்தான். அவர் இருந்தவரை யானை பலம் என்று நினைத்து வாழ்ந்த சசிகலாவுக்கு, நடராஜன் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில நாள்களாக இரவு சசிகலா சரியாக தூங்காமல் அடிக்கடி எழுந்திருப்பதும் நடப்பதுமாக இருக்கிறார். உடனிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி தூங்கச் சொல்லியும் தூக்கம் வரவில்லை என்று கூறுகிறார். படுத்தாலே அவர் நினைவாக இருக்கிறது. தூக்கம் வந்தால் கனவில் அவர் கஷ்டமாக பேசுகிறார் என்று புலம்பி கண்கலங்குகிறார் சசிகலா” என்று முடித்தார்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வியாழன் 29 மா 2018