மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

பதிலில்லாத கேள்விகள்: பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

பதிலில்லாத கேள்விகள்: பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

இராமானுஜம்

தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற திறந்த மனதுடன், உண்மைக்கு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் திரையுலகில் இவ்வளவு நீண்ட நாள்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து இருக்காது என்பதுதான் திரையுலக பிரச்சினைகளைக் கவனித்து வருபவர்களின் கருத்தாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம், தங்கள் கோரிக்கை சரியோ, தவறோ அதில் இன்றுவரை உறுதியாக இருக்கிறது. தலைமையை உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைமை பலவீனமாகவும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப் போன்று அனைவரின் ஆதரவு உள்ள தலைமை இல்லாததன் விளைவு தெளிவான முடிவையும் விவாதத்தையும் முத்தரப்புக் கூட்டத்தில் முன்வைக்க முடியவில்லை.

“சென்னையில் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்களில் புரொஜக்டர்கள் சொந்தமாக நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் புரொஜக்டர்கள் உள்ளன. இவற்றுக்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் VPF கட்டணம் இதுவரை செலுத்தி வருகிறார்கள். அந்தப் பணம் யாருக்குப் போகிறது?” என்று தயாரிப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திடம் பதில் இல்லை.

பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட அபிராமி ராமநாதன் தியேட்டரில் இருப்பது சொந்த புரொஜக்டர். இங்கு வாரம் குறைந்தபட்சம் ஐந்து படங்கள் திரையிடப்படுகிறது. இந்தப் படங்களுக்கு VPF கட்டப்படுகிறது. “இது ஏன் கட்டப்பட வேண்டும்?” என்று விஷால் தரப்பில் கேட்கப்பட்டதற்கு அவரால் பதில் கூற முடியவில்லை.

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சார்ஜ் பற்றியதும் உண்டு. இதுபற்றி எதிர்தரப்பில் கேள்வியெழுந்தபோது, “முதல் போட்டுப் படம் தயாரிப்பது நாங்கள், பணம் கொடுத்து வாங்குவது விநியோகஸ்தர், அட்வான்ஸ் கொடுத்துத் திரையிடுவது திரையரங்கு, இதில் எந்த வகையிலும் சம்பந்தமில்லாது பணம் சம்பாதிக்கும் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. “அதை முதலாளிகளான நாம் இருவரும் சேர்ந்து, கட்டணத்தைக் குறைத்து நடத்தலாமே!” என்கிற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கேள்விக்கு தியேட்டர் சங்கத்திடம் நேர்மையான பதில் இல்லை.

“ ‘நாங்கள் தயாரிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை. வசூல் மோசமாக இருக்கிறது. முதல் தேறுவதே கஷ்டமாக இருக்கிறது’ என்கிறீர்கள், ஏற்றுக்கொள்கிறோம். நேர்மையாக நடப்பதாகக் கூறும் நீங்கள் ஏன் கணினிமயமாக்கி தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் வசூல் தகவலை பொதுமைப்படுத்தக் கூடாது?” என்கிற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு தியேட்டர் சங்கம் பதில் கூற முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘எம்.ஜி, அட்வான்ஸ் கொடுத்து படம் திரையிடும் திரையரங்குகள் 60%, 70% என்ற அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்குப் பங்குத் தொகை தருகிறபோது, அட்வான்ஸும் கொடுக்காமல், எந்தச் செலவும் செய்யாமல், படம் கொடுக்கும் தயாரிப்பாளரிடம் காட்சிக்கு 100 டிக்கெட் வாங்க வேண்டும், தியேட்டர் மேனேஜருக்கு ஒரு படத்துக்கு ஐந்தாயிரம் கவர் கொடுத்துத் திரையிடும்படங்களுக்கு 50% - 40% பங்குத் தொகை தான் தருவேன் என அதிகார மமதையுடன் பேசுவது எந்த ஊர் நியாயம்?’ எனக் கேட்கும் தயாரிப்பாளர்களுக்கு அர்த்தத்துடன் பதில் சொல்ல அபிராமி ராமநாதனால் கூற முடியவில்லை.

‘பிரின்ட் முறை இருந்தபோது தியேட்டர்களில் புரொஜக்டர் இருந்தது அதற்குத் தயாரிப்பாளர்கள் வாடகை கொடுத்ததில்லை. டிஜிட்டல் மயமானதற்குப் பின் புரொஜக்டருக்கு இதுவரை தயாரிப்பாளர்கள் வாடகை கொடுத்து வந்துள்ளனர். இனியும் நாங்கள் ஏமாந்து கட்ட வேண்டும் எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்?’ எனக் கேட்கும் தயாரிப்பாளர்கள், கியூப் நிறுவன ஏஜெண்டுகளை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கைகாட்டுவதை ஏற்க முடியாது என்பதற்கு தியேட்டர் சங்கத்தால் நியாயமான பதிலை சொல்ல முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என அனைத்துக்கும் சொந்த அலுவலகங்கள் இருக்கிறது. இருப்பினும் நேற்று மாலை சென்னை காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பில் அச்சங்கத்தின் தலைவர் விஷால், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரோகிணி பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அருள்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வழக்கம் போன்று மேற்கண்ட கோரிக்கைகள் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதில் எந்தக் கோரிக்கை சம்பந்தமாகவும் சுமுக முடிவு எட்டப்படாமல் கூட்டம் முடிந்துள்ளது. மீண்டும் அடுத்த வாரம் கூடிப் பேசலாம் எனக் கூட்டம் கலைந்துள்ளது.

கடந்த 28 நாள்களாக நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், இவர்கள் அசுர பல ஒற்றுமையுடன் இணைந்து போராடுவது எதனால்?

தியேட்டர்கள் சங்கம் எந்தச் சமரசத்துக்கும் உடன்படாமல் டிஜிட்டல் நிறுவனங்களின் ஊதுகுழலாகச் செயல்படுகிறதா?

எந்தத் தரப்புக்கும் ஆதரவு நிலை எடுக்காமல் விநியோகஸ்தர்கள் நடுநிலை வகிக்கிறார்களா?

நடுநிலையுடன் கூடிய விரிவான கட்டுரை மாலை 7 மணி பதிப்பில்...

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon