மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

சிறப்புக் கட்டுரை: ஆட்டத்தின் கவுரவத்தைச் சிதைத்தவர்கள்!

சிறப்புக் கட்டுரை: ஆட்டத்தின் கவுரவத்தைச் சிதைத்தவர்கள்!

கிங் விஸ்வா

கிரிக்கெட் விளையாட்டில், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது, அவர்களது பாணியின்படி, பந்து தரையில் பிட்ச் ஆன பிறகு பேட்ஸ்மேனுக்கு உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ செல்லும். இதைத்தான் In Swing / Out Swing என்று சொல்கிறார்கள். சற்று நேரம் நிலைத்து நின்று விளையாடினால், இம்முறையிலான பந்துகள் எப்படி வரும் என்பதை ஓரளவுக்குக் கணித்துவிடலாம். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாகப் பந்து வீச்சாளர்களால் புதியதொரு வழிமுறை பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதுதான் ரிவர்ஸ் ஸ்விங் (Reverse Swing).

ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்ன?

ஒரு பந்து வீச்சாளரை உதாரணமாக வைத்து இதை விளக்குகிறேன். கபில்தேவ் பந்து வீசும்போது, அவரது மணிக்கட்டு, பந்து அவரது கையை விட்டு வரும்போது பந்தை அவரது விரல்கள் பிடித்திருக்கும் விதம் ஆகியவற்றை வைத்து, அவர் வீசப்போகும் அவுட் ஸ்விங்கைக் கணித்துவிடலாம். அவுட் ஸ்விங் என்பது, பந்து தரையில் பிட்ச் ஆன பிறகு வலது கை மட்டையாளரை விட்டு வெளியே செல்லும் வகையில் வீசப்படுவது. ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, பந்து எவ்வளவு தூரம் ஸ்விங் ஆகும் என்பதைக் கணித்து நின்று விளையாடலாம். அதுவும் கிரிக்கெட் பந்து புதியதாக இருக்கும்வரையில்தான் இந்த மாதிரி ஸ்விங் செய்ய இயலும். தொடர்ந்து விளையாடிய பிறகு, 20 – 25 ஓவர்களுக்குப் பிறகு, பந்தின் பளபளப்பு (Shining) மங்கிய பிறகு, அதைக் கொண்டு ஸ்விங் செய்வது மிகவும் சிரமம். எனவே, முதல் 20 ஓவர்களைக் கடந்துவிட்டால், ஸ்விங் பந்து வீச்சைக்கண்டு அஞ்சாமல், மட்டையாளர்கள் அதைச் சுலபமாகக் கையாளத் தொடங்கினர். இதற்கு மாற்றாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாணிதான் ரிவர்ஸ் ஸ்விங்.

இந்த முறையில், பந்து வீச்சாளர்களும் அவரது அணி வீரர்களும் மிகவும் கவனமாகப் பந்தைக் கையாள்வார்கள். அதுவும் பந்தின் ஒருபக்கத்தில் மட்டும் அதன் பளபளப்பு விலகாமல் பார்த்துக்கொள்வார்கள். அதாவது, 20 ஓவர்கள் கழித்தும் பந்தின் ஒருபக்கம் புதியதாகவே இருக்கும்படியாக அவர்கள் கவனத்துடன் இருப்பார்கள். பந்தை எடுத்து, அதை ஒரு பக்கமாகவே தேய்ப்பார்கள். இன்னொரு பக்கத்தை அப்படியே கரடுமுரடாக இருக்கும்படியாக விட்டு வைப்பார்கள்.

இதனால் என்ன ஆகும் என்றால், வழக்கமாக கபில்தேவ் பந்து வீசும்போது, பேட்ஸ்மேனை விட்டு விலகிச் செல்ல வேண்டிய பந்து திடீரென்று பேட்ஸ்மேனை நோக்கி உட்புறமாக வரும். ஆக, பந்தின் ஸ்விங்கினைக் கணிப்பது இயலாத காரியம் ஆகிவிடும். பந்தை மிகவும் கவனமாகப் பார்த்து, அதன் ஷைனிங் எந்தப் பக்கம் இருக்கிறது என்பதையும் கூர்ந்து நோக்கி, அதற்கேற்றாற்போல் அட்ஜஸ்ட் செய்துகொண்டு விளையாட வேண்டிய கட்டாயம் பேட்ஸ்மேனுக்கு ஏற்படுகிறது. ஆனால், இப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வைக்க, டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் குறைந்தபட்சம் 40 – 50 ஓவர்கள் ஆகும். அப்போதுதான் பந்து ஒருபக்கம் அதன் ஷைனிங்கை முழுவதுமாக இழந்திருக்கும்.

ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் போக்கு மாற ஆரம்பித்திருக்கிறது. தொடர்ச்சியாக விளையாடி, பந்து குறிப்பிட்ட ஓவர்கள் வரை பயன்பாட்டில் இருந்து, அதன் ஒருபக்க ஷைனிங்கை இழப்பதற்குப் பதிலாக, ஆட்ட விதிகளுக்கு மாறாக செயற்கையாக ஒரு பக்கத்தின் ஷைனிங்கை நீக்க ஆரம்பித்தார்கள். குளிர்பான பாட்டில்களின் மூடி (Cork), சிறிய ஸ்க்ரூ போன்றவற்றை வைத்து பந்தின் அமைப்பை, அதன் போக்கை மாற்ற ஆரம்பித்தார்கள். இப்படி செயற்கையாக பந்தின் அமைப்பை மாற்றுவதற்குத்தான் பந்தைச் சிதைத்தல் (Ball Tampering) என்று பெயர். இது கிரிக்கெட் விதிகளின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இப்போதைய சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சட்டங்களின்படி, இது இரண்டாம் அளவிலான ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. இப்படிப் பந்தின் போக்கை செயற்கையாக மாற்றுபவர்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் பங்கேற்கத் தடை விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

தொடங்கிவைத்த புண்ணியவான் யார்?

இம்முறையிலான முறையற்ற ரிவர்ஸ் ஸ்விங்கை ஆரம்பித்து வைத்தவர் பாகிஸ்தானின் சர்ஃப்ராஸ் நவாஸ்தான் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இம்ரான் அதை அவருக்கு அடுத்த தலைமுறை பந்து வீச்சாளர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும், அவர் இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் (கவுண்டி) விளையாடும்போது மற்றவர்களுக்குக் கற்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. மெல்ல மெல்ல இந்தச் செயல் ஒரு ரகசியக் குழுமத்தின் செயல்பாட்டிலிருந்து ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. இம்முறையில் மிகவும் விரைவாக எதிரணியின் இறுதிநிலை ஆட்டக்காரர்களை வீழ்த்த முடிந்ததால், ஏறக்குறைய உலகின் அனைத்து முன்னணி ஆட்டக்காரர்களும் இதைப்பற்றித் தெரிந்துகொண்டார்கள்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்து அங்கே நான்கு டெஸ்ட் மேட்ச் போட்டிகளைக்கொண்ட தொடரை விளையாடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அபாரமாகப் பந்து வீசி, தென்னாப்பிரிக்காவின் இறுதி நிலை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாப்பிரிக்கா, அடுத்த 56 பந்துகளில் வெறும் 12 ரன்களுக்குத் தனது கடைசி 5 விக்கெட்டுகளை இழக்கிறது. இந்த முறை ஸ்டார்க் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.

அதைப் போலவே, இரண்டாவது இன்னிங்ஸிலும் 283 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த தென்னாப்பிரிக்கா, கடைசி ஐந்து விக்கெட்டுகளை 17 ஓவர்களில் வெறும் 15 ரன்களுக்கு இழந்து போட்டியில் தோற்கிறது.

இங்கே மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். 1991-92க்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி மீண்டும் விளையாடத் தொடங்கியதிலிருந்து, இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகள் மிகவும் ஆக்ரோஷமாகவே இருந்துவந்தன. இரு அணிகளும் தீவிரமாக விளையாடினாலும் ஆஸ்திரேலிய அணியினர் எதிரணியினரைக் கேவலமாகத் திட்டுவது, அவர்களது குடும்பத்தினரைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுவந்தனர். இதை அவர்கள் Sledging என்று பெயரிட்டு, பெருமையாகவும் இதைச் செய்து வந்தார்கள். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் இதுபோன்ற விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர்.

துப்பாக்கிக்கு என்ன பதில்?

1994ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது, ஆலன் பார்டர்தான் கேப்டனாக இருந்தார். அவர் தொடர்ச்சியாக எதிரணி வீரர்களைக் கிண்டல் செய்தும் திட்டியும் வந்தார். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆல் ரவுண்டரான ப்ரையன் மேக்மிலன் தனது பொறுமையை இழந்துவிட்டார். அப்போது மைதானத்தில் பாதுகாப்புக்காக நிற்கும் காவலரிடம் 9 MM துப்பாக்கி இருப்பதைக் கண்ட மேக்மிலன், அதை வாங்கி அதில் இருந்த தோட்டாக்களை எடுத்துவிட்டு வெற்றுத் துப்பாக்கியுடன் ஆஸ்திரேலிய அணியினரின் அறைக்குச் சென்று ஆலன் பார்டரை மிரட்டி, நடுங்க வைத்தார்.

அதன் பிறகாவது ஆஸ்திரேலிய அணியினர் அமைதியாக இருந்தார்களா என்றால், இல்லை. ஆலன் பார்டர் பேசவில்லை. ஆனால், அவரது அணியில் இதற்காகவே நேர்ந்து விடப்பட்டவர்களாக ஷேன் வார்ன், மெர்வ் ஹ்யூஸ் போன்றவர்கள் அதே தொடரில் தொடர்ச்சியாக sledging செய்துவந்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் தொடர்ச்சியாகத் தொடர்களை வென்றுள்ளது. அதைப் போலவே, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்யும் தென்னாப்பிரிக்காவும் தொடர்ச்சியாக வென்றுவருகிறது. அதாவது, ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தோற்றும், தென்னாப்பிரிக்காவில் சென்று வென்றும் வருகிறது. இந்நிலையில், நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை எப்படியாவது வென்றாகிவிட வேண்டுமென்ற ஆர்வம் ஆஸ்திரேலியர்களிடம் இருந்தது. ஆனால், முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணியினர், இரண்டாவது போட்டியில் ஏபி டிவிலியர்ஸின் அபார ஆட்டத்தினாலும், காகிசோ ரபாடாவின் அற்புதமான பந்து வீச்சாலும் நிலைகுலைந்து தோற்றுவிட்டார்கள்.

எல்லை மீறிய ஸ்லெட்ஜிங்

இந்தப் போட்டியின்போதுதான் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டனும் ஆரம்ப ஆட்டக்காரருமான டேவிட் வார்னர், தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் ஆகியோருக்கிடையே பிரச்சினை உருவானது. எதிரணியினரைக் கேவலப்படுத்துவது, அவர்களைத் திட்டுவது, பேட்டிங் செய்பவர்பவர்களைத் திட்டி, மன அளவில் அவர்களைத் தடுமாற வைப்பதற்குப் பெயர் போனவர் டேவிட் வார்னர். வழக்கம்போல இம்முறையும் அவர் தொடர்ச்சியாகத் திட்டிக்கொண்டேவர, ஒருகட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் டீ காக்கும் திரும்பிப் பேச ஆரம்பித்தார். ஆனால், இதை டேவிட் வார்னரால் தாங்கிக்கொள்ள முடியாமல், அவர் மைதானத்திலிருந்து திரும்பும்போது மாடிப்படியில் டீ காக்குடன் அடிதடியில் ஈடுபடப் போனார். மற்றவர்கள் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டிய சூழல் உருவானது.

இந்த நிலையில்தான் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டுமென்ற வெறியில் இருந்த ஆஸ்திரேலிய அணியினரைத் திணற வைத்தார்கள் டீன் எல்கரும் டிவிலியர்ஸும். முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில் எதையாவது செய்து வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் ஒரு செயலைச் செய்தார்கள்.

சதியாலோசனை

ஆஸ்திரேலிய அணியில் இருப்பதிலேயே மிகவும் அனுபவமற்றவரான ஆரம்ப நிலை ஆட்டக்காரர் கேமரூன் பேன்க்ராஃப்டிடம் மஞ்சள் நிற உப்புத்தாள் ஒன்றைக் கொடுத்து, அதை வைத்து பந்தின் ஒரு பக்கத்தை உரசி ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வகை செய்தார்கள். அவரும் அப்படியே செய்தார். ஆனால், விதி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பந்து வீச்சாளரும் இன்னாள் வர்ணனையாளருமான ஃபேனி டிவிலியர்ஸ் வடிவில் குறுக்கிட்டது.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியினரின் பந்துகள் 25 - 26 ஓவர்களிலேயே ரிவர்ஸ் ஸ்விங் ஆவதைக் கண்ட அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவர் கேமராமேன்களிடம் உன்னிப்பாகக் கவனிக்கச் சொன்னார். இந்தப் போட்டியை மொத்தம் 36 HD கேமராக்களை வைத்து ஒளிபரப்பி வந்ததால், மைதானத்தை அங்குலம், அங்குலமாக அலசி ஆராய முடிந்தது.

சொல்லி வைத்ததுபோல, பேன்க்ராஃப்ட் பந்தைச் சிதைக்கும்போது கேமராவில் சிக்கிக்கொண்டார். அதை மைதானத்திலிருந்த பெரிய திரையில் காண்பித்த உடனே, ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான டேரன் லீமேன் உடனடியாக இன்னொரு வீரரான பீட்டரிடம் சொல்ல, அவர் மைதானத்துக்குள் ஓடிச் சென்று பேன்க்ராஃப்டிடம் சொல்கிறார். அவசரம் அவசரமாக பேன்க்ராஃப்ட் உப்புத்தாளைத் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கிறார். ஆனால், பெரிய திரையில் இதுவும் காண்பிக்கப்பட, நடுவர்கள் பேன்க்ராஃப்டை அழைத்துப் பேச, அவர் தன்னிடம் எதுவும் இல்லை என்று மறுக்கிறார். அப்போது பதற்றத்துடன் அணியின் கேப்டன் ஸ்மித் அருகில் வந்து நிற்கிறார்.

அன்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்மித், தானும் தனது அணியின் மேல்மட்டக் குழுவினரும் இணைந்துதான் இதைச் செய்தோம், இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்றெல்லாம் பேசினார். பின்னர், துணைத் தலைவரான டேவிட் வார்னரும் இதில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளதாகத் தெரியவர, சர்வதேச கிரிக்கெட் வாரியம் உடனடியாக கேப்டன் ஸ்மித்தை ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் சதர்லேன்ட் சம்பந்தப்பட்ட மூவரையும் உடனடியாக அணியிலிருந்து விலக்குவதாகவும், அவர்களை நாடு திரும்பச் சொல்லியும் அறிவித்துள்ளார். ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனவான்களின் விளையாட்டு என்று சொல்லப்படும் கிரிக்கெட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்னும் வெறி சிலரை இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் இறங்கத் தூண்டுகிறது. பந்தைச் சேதப்படுத்தும் செயல் அரங்கேறுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பு பலரும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல விதமான உத்திகளைப் பயன்படுத்திப் பந்தைச் சிதைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாமா?

(பந்தைச் சிதைப்பது குறித்த குற்றச்சாட்டுகளும் அவற்றின் விளைவுகளும்: நாளைக் காலை 7 மணிப் பதிப்பில்.)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கிங் விஸ்வா, ஊடகத் துறையில் 16 ஆண்டுகளாக இயங்கிவருபவர். காமிக்ஸ், கிரிக்கெட், சினிமா ஆகியவற்றின் மீது ஆர்வம்கொண்டவர். இவரைத் தொடர்புகொள்ள: princ[email protected])

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon