மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

களத்திலிருந்து… விகடன் குழுமத்தில் என்ன சிக்கல்?

களத்திலிருந்து… விகடன் குழுமத்தில் என்ன சிக்கல்?

விகடன் குழுமம் தங்களை வஞ்சிப்பதாக நீண்ட நாள்களாகக் குற்றச்சாட்டை வைத்துவரும் அந்நிறுவன அச்சக ஊழியர்கள் சமீபத்தில் பட்டினிப் போராட்டத்தையும் நடத்தி முடித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஊழியர்களின் இந்தப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பதை அறிய அங்கு சென்றோம்.

தொழிலாளர் தரப்பு

“விகடன் குழுமத்துக்கென்று சொந்தமாக 13 இதழ்கள் உள்ளன. மாதத்துக்கு 50 லட்சம் பிரதிகள் விகடன் சார்பில் அச்சிடப்படுகின்றன. இதற்கான அச்சகம் அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்தது. சுமார் 316 ஊழியர்கள் இங்கு பணியாற்றினோம். நானெல்லாம் மூன்றாம் தலைமுறை ஊழியர். என் தாத்தா காலத்திலிருந்து விகடனில்தான் பணியாற்றி வருகிறோம். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் தர நிர்வாகம் நிர்பந்திக்கிறது. அம்பத்தூரில் உள்ள அச்சகத்தையும் மூடிவிட்டது. இதனால் எங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. வேலை செய்ய நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால், நிர்வாகம் எங்களைப் புறக்கணிக்கிறது” என்று ஏ.அண்ணாதுரை என்ற ஊழியர் வேதனையோடு கூறினார்.

ஊழியர்களை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்த வேண்டிய நோக்கமென்ன என AITUC நிர்வாகி கே.குமாரிடம் கேட்டோம். அதற்கு, “பத்திரிகையாளர்களுக்கான மஜித்தியா ஊதிய வாரியத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்த நிர்வாகம் மறுத்து வருகிறது. 18,000 ஆயிரம் ஊதியம் வாங்கியவர்களுக்கு 21,000 ஆயிரமாக ஊதியத்தை நிர்வாகம் உயர்த்தியது. ஆனால், மஜித்தியா ஊதிய வாரியத்தின் பரிந்துரைப்படி 59,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தப் பரிந்துரையை நிறைவேற்ற மறுக்கும் நிர்வாகம், நிரந்தர ஊழியர்களை வெளியேற்றிவிட்டு தற்போது ஒப்பந்த ஊழியர்களை வைத்து வேலை வாங்கி வருகிறது” என்றார் குமார்.

“316 ஆக இருந்த நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை 36 ஆகக் குறைந்துள்ளது. இவர்களையும் ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தி வருகிறது. தற்போது அச்சகத்தையும் மூடிவிட்டது” என்று சொல்லும் குமார், மற்றொரு ஏமாற்று வேலையிலும் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். “அம்பத்தூரிலுள்ள அச்சகம் கடந்த 3.2.18 அன்றே மூடப்பட்டு விட்டது. தற்போது திருச்சியின் கள்ளிக்குடியில் SSS Softsource Contract and Printing Solution Pvt Ltd என்று பெயரில் அச்சகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அச்சாகும் பிரதிகள்தான் தமிழகம் முழுக்க விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், அம்பத்தூரில் அச்சாகிறது என்றே இதழ்களில் குறிப்பிடப்படுகிறது. RNI ACTபடி இது மிகப் பெரிய குற்றமாகும்” என்றார்.

பட்டினிப் போராட்டத்தோடு நிற்காமல் அடுத்தகட்டப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளோம் என ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

நிர்வாகத் தரப்பு கூறுவது என்ன?

இதற்கிடையே ஊழியர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக விகடன் தலைமை மனிதவள மேலாளர் எம்.சூரியைத் தொடர்புகொண்டோம். தொழிலாளர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அவர், இது தொடர்பாக விரிவாகப் பேசுகையில், “எட்டு மணி நேர வேலை. சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும். அதிக எண்ணிக்கையில் உள்ள தொழிலாளர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் என்பவற்றையே நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம். அச்சக பணிகளில் ஏற்பட்டுள்ள போட்டி மற்றும் மந்த நிலை காரணமாகக் கடந்த நான்கு ஆண்டுகளில் 33 சதவிகித வேலைகள் குறைந்துள்ள நிலையில், எங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் குறித்து அவர்கள் தரப்பில் பேசப்படவில்லை” என்றார்.

“இது தொடர்பாகத் தொழிலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தரப்பில் ஆஜராகாமல் இழுத்தடிக்கப்பட்டது. மஜீத்தியா ஊதியக் குழுவின் பரிந்துரையை நாங்கள் அமல்படுத்துவதில்லை எனக் கூறப்படுவது உண்மையல்ல. நாங்கள் மஜீத்தியா ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தி வருகிறோம். அவர்கள் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காததால் இவ்வாறு புகார் கூறுகின்றனர்” என்று தெரிவித்தார் சூரி.

நிரந்தர ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதாகப் புகார் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, “ஒப்பந்த ஊழியர்கள் ஒருசில துறைகளில் பணியாற்றுகின்றனர் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் கூறுவதுபோல் எந்த ஊழியர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. தற்போது தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அச்சகம் மூடப்பட்டுள்ளது. திருச்சியில் தற்காலிகமாக அச்சகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்டச் சிக்கல் காரணமாக அம்பத்தூர் அச்சகத்தின் பெயரே இதழ்களில் இடம்பெற்று வருகிறது” என்றார்.

“வேலைநிறுத்தத்தைக் கைவிடுதல், அச்சகத்திலிருந்து புத்தகங்களை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும், நிர்வாகத்துக்கு எதிராகத் தவறான தகவல்களைக் கூறியதற்கு மறுப்புரை கூற வேண்டும் என மூன்று நிபந்தனைகளைத் தொழிலாளர்களுக்கு வைத்துள்ளோம். இதற்கு அவர்கள் செவி சாய்த்து பேச்சுவார்த்தைக்கு வரும்பட்சத்தில் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க தயாராகவே உள்ளோம்” என்றும் சூரி தெரிவித்தார்.

- மா.முருகேஷ்

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon