மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: திருப்பூர் - அழிந்து வரும் தொழில் நகரம்!

சிறப்புக் கட்டுரை: திருப்பூர் - அழிந்து வரும் தொழில் நகரம்!

ஆர்.மோகன் குமாரமங்களம்

இந்தியாவின் பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் சிறந்த தொழில் நகரமான திருப்பூர், சர்வதேச அளவில் ஜவுளித் துறையில் மிகவும் பெயர் பெற்றது. இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருப்பூரின் ஏற்றுமதி வாயிலாகக் கிடைக்கும் பத்தாயிரம் கோடிக்கும் மேலான அந்நியச் செலாவணி அனைத்தையும் இந்தியா அனுபவிக்கிறது. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் மையமாக திருப்பூர் திகழ்கிறது. தொழில்முனைவோரின் சொர்க்கப் பூமியாக அறியப்படும் திருப்பூரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலைக்காக வந்து பின்னர் தாங்களே இங்கு சிறு தொழில் தொடங்குவதும் உண்டு. இவ்வாறாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இங்கு தொழில் கற்றுக்கொண்டு தொழில் தொடங்குகின்றனர். இருப்பினும், திருப்பூரில் இளம் தொழில்முனைவோர் பலர் தற்கொலை செய்து கொள்வதாகச் செய்திகள் பல தொடர்ந்து வந்துகொண்டிருப்பது ஏன்?

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சர்வதேச அளவில் வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வழங்கும் கடும் போட்டியும் அதில் ஒன்று. குறைந்த வருவாய்கொண்ட நாடாக அறியப்படும் வங்கதேசத்துடன் கூடப் போட்டியிட முடியாத சூழல் இவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? சர்வதேச அளவில் இந்திய ரூபாய் மதிப்பு மாற்றம் அதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், நாடுகளுக்கு இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஜவுளித் துறையினரை பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தைகளுடன் கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகள் இலவச வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதால் இந்தியாவுக்கு ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு ஆட்டோமொபைல் மற்றும் ஒயின் உற்பத்தித் துறையினருக்கும் இந்த இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. ஐரோப்பிய யூனியனுடன் வங்கதேசம் மேற்கொண்டுள்ள இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் அந்நாட்டுக்கு இந்தியாவைவிட 10.5 சதவிகிதம் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வியட்நாமும் இதேபோன்றதொரு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியனுடன் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்நாடு ஏற்கெனவே ஆஸ்திரேலியா, புருநெய், கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் டிரான்ஸ் - பசிபிக் ஒப்பந்தத்தில் உள்ளது.

இதுபோன்ற வெளிக்காரணிகளால் ஏற்பட்ட சவால்களைக் கடந்து தொழிலை நடத்திவரும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டிலும் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளும் இவர்களை முழுவதுமாக பாதாளத்தில் வீழ்த்திவிட்டன.

ஒருபுறம் உள்நாட்டில் ஆடைகளுக்கான தேவையைக் குறைக்கும் பணியை பணமதிப்பழிப்பு மேற்கொள்ள, மறுபுறம் உற்பத்திச் செலவு உயர்வு மூலதனப் பற்றாக்குறை போன்ற இன்னல்களை ஜவுளித் துறையினருக்கு ஏற்படுத்தும் பணியை ஜிஎஸ்டி செவ்வனே செய்து முடித்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக, ஜவுளி ஏற்றுமதியில் துறைமுகப் போக்குவரத்து ஆகியவற்றுக்காக ஏற்றுமதியாளர்கள் செலவிட்ட தொகையில் 13.65 சதவிகிதம் ஊக்கத்தொகையாக அவர்களுக்குத் திரும்பக் கிடைத்த நிலையில், ஜிஎஸ்டி அமலான பிறகு அத்தொகை 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. அதாவது இவர்களுக்கான ஊக்கத்தொகை 5.7 சதவிகிதப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ரீபண்டாக 2 சதவிகிதம் கிடைத்தாலும் முந்தைய ஊக்கத்தொகையை விடத் தற்போது 3.7 சதவிகித இழப்பு இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏற்றுமதியாளர்களுக்கான ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையில் 90 சதவிகிதம் ஏற்றுமதித் தேதியிலிருந்து 9 நாள்களுக்குள்ளும், மீதத் தொகை அடுத்த 90 நாள்களுக்குள்ளும் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், பெரும்பாலான ஏற்றுமதியாளர்களுக்கான ரீபண்ட் தொகை முறையாகக் கிடைக்கவேயில்லை என்று புகார் கூறுகின்றனர். இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் போதிய மூலதனமின்றித் தவிக்கின்றனர். அவர்கள் தங்களது தொழிலுக்காகப் பெற்ற கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தனை பிரச்சினைகளைச் சந்தித்து நொ(டி)ந்துபோன திருப்பூர் ஜவுளித் துறையினரின் எஞ்சிய ஜீவனையும் வாங்கும் நோக்கிலேயே தற்போது மின்னணு வழிக் கட்டணச் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக அவர்கள் கவலையுறுகின்றனர். எப்படியோ ஜிஎஸ்டி என்ற அரசின் சீர்திருத்த நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி நகரமான திருப்பூரை விழுங்கிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு காணச் சரியான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இவர்கள் இருக்கின்றனர். அது பொய்த்துப்போனால் திருப்பூரை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் தொழில்முனைவோரையும் தற்கொலைக்குத் தூண்டிய அவப்பெயர் மட்டுமே அரசிடம் எஞ்சியிருக்கும்.

நன்றி: தி இந்து

தமிழில்: செந்தில் குமரன்

திருப்பூர் - தத்தளிக்கும் தொழில் நகரம்!

தற்கொலைக்கு ஆளாகும் திருப்பூர் ஜவுளித் துறையினர்!

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon