மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

நவநீதகிருஷ்ணன் பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும்!

நவநீதகிருஷ்ணன் பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும்!

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என்று மாநிலங்களவையில் நேற்று (மார்ச் 28) பேசியபோது குறிப்பிட்டார் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன். இதுகுறித்து, தமிழகத்தைச் சேர்ந்த கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்தில் அமைக்க வேண்டுமென்று, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இன்றுடன் (மார்ச் 29) அந்தக் காலக்கெடு முடிவடையவுள்ளது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்துப் பேசினார் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்.

அப்போது, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் அரசியல் சாசனம் அர்த்தமற்றதாகி விடும். தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அனைத்து அதிமுக எம்.பிக்களும் தற்கொலை செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

அவரது ஆவேசப் பேச்சு குறித்து, தமிழகத்திலுள்ள கட்சித் தலைவர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர். உணர்ச்சிவசப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்றே, அதன் சாராம்சம் அமைந்துள்ளது.

தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “நவநீதகிருஷ்ணன் பேச்சில் தவறு ஏதும் இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு நீர்வளத் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்குப் பதிலாக, தற்கொலை செய்துகொள்வதாகச் சொல்வதால் என்ன பலன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன். “தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம். அதை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று சொல்வதெல்லாம் ஒரு வழியா? நவநீதகிருஷ்ணன் பேச்சில் ஆவேசக் குரலே இல்லை. மத்திய அரசைப் பணிய வைக்க நிறைய வழிகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்தால், ஆளும்கட்சியை மட்டுமே வைத்து எப்படி ஆட்சி நடத்த முடியும்?” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நவநீதிகிருஷ்ணன் பேச்சு, அவரது சொந்த கருத்து” என்று கூறியுள்ளார் திருச்சி எம்.பி குமார். நவநீதகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவா. “மேலாண்மை வாரியம் கோரி, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி, “தற்கொலை செய்துகொள்வது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது” என்றார். “காவிரி பிரச்சினையில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டுவரும் முனைப்பில் பாஜக உள்ளது” என்றார். “தற்போதைய சூழலில் அதிமுக எம்.பிக்கள் உணர்ச்சிபூர்வமாகப் பேசாமல், ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னாலே ஒருவரும் கூட வர மாட்டார்கள். தற்கொலை செய்ய போகிறோம் என்று நவநீதகிருஷ்ணன் சொன்னால் யாராவது வருவார்களா? எனவே, உணர்ச்சிவசப்படுவதால் எந்தப் பலனும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதம் இருந்துவரும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், “உணர்ச்சிவசப்பட்டுப் பேசாமல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “யாரையோ சமாதானப்படுத்துவதற்காக தற்கொலை செய்து கொள்வோம்” என நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, “நவநீதகிருஷ்ணனின் நடிப்பை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார். “காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்தாலே போதும். ஆனால், நவநீதகிருஷ்ணன் நடிக்கிறார். ஜெயலலிதா ஜெயிலுக்குப் போகவே நவநீதகிருஷ்ணன்தான் காரணம். நடிப்பில், நடிகர் சிவாஜியையே அவர் மிஞ்சிவிட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon