மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: லிங்காயத் தனி மதமாவதால் என்ன நடக்கும்?

சிறப்புக் கட்டுரை: லிங்காயத் தனி மதமாவதால் என்ன நடக்கும்?

அ.குமரேசன்

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

அரசியல் நோக்கத்துடன் ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதில் என்ன தவறு? எந்த நடவடிக்கையில்தான் அரசியல் இல்லை? அரசுப் பணிகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த மண்டல் குழு அறிக்கையைச் செயல்படுத்துவது என்று வி.பி.சிங் அரசு முடிவு செய்தது. அதன் பின்னணியில், துணைப் பிரதமராக இருந்த தேவிலால் ஆதிக்கத்துக்கு அணைபோடுகிற அரசியலும், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவளித்த பாஜகவின் கெடுபிடிகளுக்கு ஓய்வளிக்கிற அரசியலும் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், அதன் பலனாக மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் முகங்களைக் காண முடிகிறது என்ற மாற்றம் ஏற்பட்டதே. மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கொண்டுவருகிற பல திட்டங்களில் மக்களைக் கவர்கிற வாக்கு வங்கி அரசியல் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால், அந்தத் திட்டங்களின் பயனாளிகளான மக்களுக்குக் கூடுதல் நன்மைகள் கிடைப்பதை மறைக்கவும் முடியாது.

எந்தவொரு நியாயமான கோரிக்கையும் அரசியல் பிரச்சினையாக்கப்படுவதில் எவ்விதத் தவறும் இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது அரசியல் என்றால், அதை எதிர்ப்பதும் அரசியல்தானே? குறிப்பிட்ட நடவடிக்கையால் உண்மையாக மக்களுக்கு நன்மை கிடைக்குமா, கிடைக்காதா என்றுதான் விவாதிக்க வேண்டுமேயன்றி, அரசியல் என்று ஒதுக்கித் தள்ளுவதில் பொருளில்லை.

இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால்கூட, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களின் வாக்கு வங்கியைப் பெருக்க முயலும் ஆர்எஸ்எஸ் வியூக அரசியல் நாட்டையே மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதைக் கொஞ்சமாவது “அடங்கு” என்று சொல்லக்கூடிய ஓர் அரசியல் கருவி கிடைக்கிறது என்றால், அதைக் கையில் எடுப்பதன்றி வேறு என்ன வழி இருக்கிறது? பிரிட்டிஷ் ஆட்சியின் தயவால் ஒரே மதம் என்று ஆவணப்படுத்தப்பட்டதைப் பயன்படுத்திக்கொண்டு, ஒற்றை மத அதிகாரம், ஒற்றைக் கலாசார ஆதிக்கம் அவற்றின் திரைமறைவில் மிகப் பெரும் சுரண்டல் வர்க்கம் என்ற கோட்டை மதிலை எழுப்பும் சூழ்ச்சிகள் சூழ்கிறபோது, மதில் சுவரிலிருந்து ஒரு செங்கல்லை உருவுவதற்கு உதவக்கூடிய எந்த முயற்சியும் முட்டுக்கொடுக்கப்பட வேண்டியதே.

சிறுபான்மையினருக்கான சலுகைகளும் இட ஒதுக்கீடும்

இது தொடர்பான ஒரு விவாதத்தில் வந்த இன்னொரு கருத்து கவனத்தை ஈர்த்தது. இந்து மதவாத அரசியலில் இறங்கியிருப்போரால் சகித்துக்கொள்ள முடியாத மற்றொரு ஏற்பாடு சிறுபான்மை மதங்களுக்குத் தரப்படும் சலுகைகள். எடுத்துக்காட்டாக, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான சலுகைகள். பெரிய மதம் உடைந்து, சாதி அமைப்புகள் எல்லாமே தனித் தனி மதங்களாக அறிவிக்கப்படுமானால், இந்தச் சலுகைகளுக்குத் தேவையில்லாமல் போய்விடும் என்று அந்தக் கருத்து ஒலிக்கிறது. மேலும் தலித்துகள் உள்பட அனைத்துப் பிரிவினரும் தனி மதங்களாகிவிட்டால், அவர்களுக்கான இடஒதுக்கீடு ஏற்பாடும் தொடர முடியாது என்பதால், அதை நினைத்தும் நிம்மதியாக இருக்கலாம் என்ற சிந்தனையும் பகிரப்பட்டுள்ளது.

நையாண்டியாகச் சொல்லப்பட்டாலும், சலுகைகள் உள்ளிட்ட ஆதாயங்களுக்காகத்தான் மதம் மாறுகிறார்கள் என்பது, அவ்வாறு மதம் மாறுகிறவர்களின் உரிமைகளைக் காலகாலமாக மிதித்துவந்திருக்கிற வரலாற்று அநீதியை மறைக்க முயல்கிறவர்களின் யுக்தி. அதை எதிரொலிக்கத் தேவையில்லை.

இன்றைக்கும் “நீங்க என்ன ஆளுக” என்று கேட்டால், தங்களை இந்து என்று சொல்லிக்கொள்ளாமல், தங்களுடைய சாதியைச் சொல்லி, “நாங்க அந்த ஆளுக” என்றே பெரும்பாலோர் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சாதிகளைவிடத் நாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களாக்கும் என்ற போதைப் பெருமிதம் அதில் இருக்கிறது. தனி மதங்களாகிவிடுவதால் “அவர்கள் நமக்குச் சமமானவர்கள்” என்ற எண்ணம் மேலோங்கிவிடுமா என்ன? ஒருவேளை அவர்கள் வேறு மதத்துக்கு மாறினாலோ, தங்களையே தனி மதமாக அறிவித்துக்கொண்டாலோ, சமத்துவ எண்ணம் மேலோங்குகிற வரையில், அதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுகிற வரையில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைகள் தொடர வேண்டும். அதற்கு ஆதரவான குரல்கள் வலுப்பெற வேண்டும்.

ஒற்றைப் பெருமத ஆதிக்கம்

எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவது, எந்த மதத்துக்கும் மாறுவது, எந்த மதத்தையும் சாராமல் இருப்பது... இவை அடிப்படையான மனிதச் சுதந்திரங்கள். அத்துடன், இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசமைப்பு சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள். பலப் பல கடவுள்கள், பலப் பல வழிபாட்டு முறைகள், பலப் பல சடங்குகள் என்று இருப்பது இந்து மதத்தில், வரலாற்றுபூர்வமாக ஏற்பட்ட ரசிக்கத்தக்க இயல்பு. அவ்வாறு பன்முகத்தன்மைகள் தழைத்திருப்பது ஓர் அழகான பின்னல் வேலைப்பாடு மட்டுமல்ல, இந்து மதம் காலங்காலமாக ஒற்றைத் தத்துவத்தின் மேல், அல்லது ஒற்றை மறைநூலின் அடிப்படையில் கட்டப்பட்டதல்ல என்பதற்கு உயிர்ப்பான சாட்சியமுமாகும்.

வர்ணம், சாதி, குலம், கோத்திரம் எல்லாம் விசாரித்து, பெரியோரால் நிச்சயிக்கப்பட்டு, மரபு வழுவாமல் நடத்தப்படுகிற திருமண விழாக்களில்கூட, மேடைச் சடங்குகள் முதல் புகுந்த வீடு நுழைவு வரையில் (அதற்குப் பிறகும்கூட) “எங்க குடும்பத்துச் சம்பிரதாயப்படி இதை இப்படித்தான் செய்யணும்” என்று சில திடீர்க் கட்டாயப்படுத்தல்கள் முளைக்கும். அதிகாரத் தொனியிலோ (பெரும்பாலும் அப்படித்தான்), வேண்டுகோளாகவோ அவ்வாறு மாறுபட்ட வற்புறுத்தல்கள் தொடர்கின்றன என்பதே, பலவகைப் பண்பாடுகளின் கலவையிலும் கூட்டு வாழ்க்கையிலும் அமைந்ததே இந்து சமயம் என்பதற்குச் சான்றளிக்கிறது.

பொதுவாக, ஒரு மதம், குறிப்பிட்ட சித்தாந்தத்திலிருந்து அதைக் கற்பிக்கும் புனித நூலிலிருந்து உருவாகிறது. பிறகு அது தான் பரவிய வட்டாரங்களின் அடையாளங்களை சுவீகரித்துக்கொண்டு பன்முகத் தோற்றம் பெறும். இந்து மதம் அப்படி அல்ல. பலப் பல வட்டாரங்களில் வேரூன்றியிருந்த மாறுபட்ட அடையாளங்களைக் கோத்துக்கொண்டதால் பன்முகத் தோற்றம் கிடைக்கப்பெற்றது அது. நுட்பமாக நோக்கினால், இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் மக்களைக்கொண்டுள்ள மதமாக இருந்தபோதிலும், சுதந்திர இந்தியாவும் அதன் அரசும் மதச்சார்பற்றதாகவே இருக்கும் என்ற லட்சியத்தைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் இந்த வரலாற்று இயல்பும் இருக்கிறது. சங் பரிவாரப் பிரசாரகர்கள் சிலர் இது இந்து மதத்தின் சிறப்பு என்கிறார்கள். உண்மையில் இது இந்திய மக்களின் சிறப்பு.

என்னைப் பொறுத்தவரையில் மதச்சார்பின்றி இருப்பதோடு, மதமின்றி இருப்பதற்கே முன்னுரிமை அளிப்பேன். அப்படியொரு பக்குவ முதிர்ச்சி பெற்ற சமுதாயம் உருவாகித் தழைத்திருக்கிற கனவுதான் என்னை விழித்திருக்க வைத்திருக்கிறது. அதுவரையில், ஒற்றைப் பெருமத ஆதிக்கக் கோட்டையில் – அது எந்த மதமானாலும் – விரிசலை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒவ்வொன்றும் கைதட்டி வரவேற்கப்பட வேண்டியவையே.

தங்கள் மதத்துக்கு எதிரான சவால்கள் மற்ற மதத்தினரிடமிருந்தோ, மதம் மாறுகிறவர்களிடமிருந்தோ, மதத்தை விட்டு வெளியேறுகிறவர்களிடமிருந்தோ வரவில்லை; இந்து மக்களின் நம்பிக்கைகளை அரசியல் ஆதிக்க நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறவர்களிடமிருந்தே வருகின்றன என்பதை இந்து மக்களும் பரிசீலிக்கட்டும்.

இந்துக்களுக்கு எதிரான லிங்காயத்துகளின் சவால்!

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]).

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon