மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஏப் 2020

ஏர்டெலுக்கு மாறும் ஏர்செல் வாடிக்கையாளர்கள்!

ஏர்டெலுக்கு மாறும் ஏர்செல் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களில் சுமார் 60 சதவிகிதத்தினர் ஏர்டெல் நெட்வொர்க் சேவைக்கு மாறியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்துக்கு முன்னர் பல்வேறு இலவச சிறப்புச் சலுகை அறிவிப்புகளுடன் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாகக் களமிறங்கியது. அதன்பின்னர் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இறங்கின. இதனால் ஏற்கெனவே கடுமையான கடன் சுமையில் தவித்துவந்த இந்நிறுவனங்களுக்கு மேலும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் விளைவாக சில நெட்வொர்க் நிறுவனங்கள் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன. மறுபுறம் சில நெட்வொர்க் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. டாடா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வரிசையில் சமீபத்தில் ஏர்செல் நெட்வொர்க் முற்றிலும் முடங்கியது.

இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளும்படி ஏர்செல் நிறுவனமும், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் அறிவித்தன. அதன்படி, தமிழகத்தில் மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நெட்வொர்க் இணைப்புக்கு மாறியுள்ளதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதேபோல, நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் வாடிக்கையாளர்களும் குறிப்பாக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களில் சுமார் 60 சதவிகிதத்தினர் ஏர்டெல் சேவைக்கு மாறியுள்ளதாக ஏர்டெல் நிறுவனத் தலைமைச் செயலதிகாரியான அஜய் புரி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை மட்டுமே வழங்கிவருவதால் பெரும்பாலான ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஜியோவை விடுத்து ஏர்டெல் அல்லது வோடஃபோனுக்கு மாறுவதாகக் கூறப்படுகிறது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon