மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 மா 2018

சிறப்புக் கட்டுரை: எளிமையின் அழகு!

சிறப்புக் கட்டுரை: எளிமையின் அழகு!

கேபிள் சங்கர்

தமிழ் சினிமாவின் வேலைநிறுத்தம் என்னைப் போன்ற தீவிர படம் பார்க்கிறவர்களையே தியேட்டர்களை விட்டு தள்ளி வைத்துவிட்டது. எந்தப் படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கிறவன், யாராவது பார்த்துவிட்டு சொல்லட்டும், அப்புறம் பார்க்கலாம் என்கிற சோம்பல் வந்துவிடக் காரணம் தொடர்ந்து படங்கள் வெளியிடாமை. என்னைப் போன்றவர்களுக்கே இப்படியான எண்ணம் என்றால், மாதத்துக்கு ஒரு படம் பார்க்கிறவர்களின் மனநிலை? சரி, அதை விடுங்கள். அதையும் மீறிச் சில படங்கள் பார்க்கச் சென்று அது கொடுக்கும் மனநிறைவுதான் சினிமா. அப்படியான ஒரு படம் சமீபத்தில் பார்த்த மலையாளப் படமான ‘பூமரம்’.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் அவரின் முதல் மலையாளப் படம். வழக்கமாக மலையாளப் படங்களின் படப்பிடிப்பை 25 - 30 நாள்களுக்குள் மிகச் சாதாரணமாக, பெரிய பட்ஜெட் படங்களையே முடித்துவிடுவார்கள். ஆனால், சுமார் ஒன்றரை வருடங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை முடிக்க. அதனாலேயே கதையின் நாயகனை வைத்து சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்த மீம்ஸ்கள் ஏராளம். ஆனால் அத்தனைக்கும் பதில் சொல்கிறார்போல ஒரு படம்.

ரொம்பவே எளிமையான கதை. மகாராஜா காலேஜ் சேர்மன் காளிதாஸ். அக்கல்லூரியில் நடக்கும் ஐந்து நாள்கள் கல்ச்சுரல் நிகழ்வுகள்தான் கதைக் களம். செயின்ட் மேரீஸ் காலேஜ்தான் ஐந்து வருடங்களாக எல்லா முக்கியக் கோப்பைகளையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இம்முறையும் தக்கவைக்கத் திறமையாக தயாராகிவர, மகாராஜா காலேஜும் தயாராகிறது. ஆஹா... வழக்கமான காலேஜ் சண்டை படமா என்ற முடிவுக்கு வராதீர்கள்.

சமீபத்தில் இவ்வளவு இயல்பாக ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. ஆரம்பக் காட்சியில் அப்பாவும் மகனும் பேசிக்கொள்ளும் நீண்ட வசனக் காட்சியும் அதில் பேசப்படும் விஷயங்களும் முக்கியமானவை. டைட்டில் அதனூடே பயணிக்கிறது. வசனங்களை கவனிக்கத் தவறினால் நிச்சயம் என்னடா இது என்கிற மனநிலையைக் கொடுக்கக்கூடிய காட்சிதான் என்றாலும், அக்காட்சியின் கனம் க்ளைமாக்ஸில் அற்புதமாக உணர்த்தப்படுகிறது.

கதையில் எங்கேயும் யாரும் தண்ணியடித்துவிட்டு சலம்பவில்லை. குத்துப் பாட்டோ, ஆட்டமோ போடவில்லை. கல்லூரி மாணவர்களின் அத்தனை கொண்டாட்டங்களையும் அவர்களுடனே இருந்து பார்த்து அனுபவித்ததைப் போல உணர்வை நமக்கு ஏற்படுத்தியது இயக்குநரின் அபாரத் திறமை.

ஏன் மலையாளப் படங்களில் மட்டும் இசை அவ்வளவு மிருதுவாய், நெகிழ்வாய் இருக்கிறது என்ற கேள்விக்கான பதில் இந்தப் படம் நெடுக சொல்லப்படுகிறது. கல்லூரிப் பேராசிரியர் முதல் நாள் இரவில் காதல் கவிதை படிக்கிறார். மைம் ஆக்டிங்கில் சொல்லப்படும் அசோகரின் கதை. பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம். ஆதிவாசிகளின் நடனம், மேற்கத்திய இசை. ஒவ்வொரு கல்லூரி டீமிடமும் இருக்கும் அதற்கான பயிற்சியாளர்கள். அவர்களின் திறமை. அதிலும் செயின்ட் தெரசா கல்லூரிக்கு வரும் டிரைனர் டான்ஸர் அட்டகாசம். மரபுக் கலைகள் முதற்கொண்டு, இன்றைய புதிய தலைமுறைக் கலைகள் வரை மிக இயல்பாகவே இசையும் கலையும் அவர்களூடே பயணிக்கிற விதம், பாடப்படும் பாடல்கள், எல்லாமே மனதை வருடுபவை.

குட்டிக் குட்டி கேரக்டர்களின் காதல், புரோபசல்கள், பார்வைப் பரிமாற்றங்கள், நூல் விடுதல், புதிய காதலுக்கான தொடக்கம், காதலைச் சொல்ல சான்ஸ் தேடும் தருணங்கள் என மாண்டேஜ்களாய்ப் படம் முழுவதும் விரவியிருக்கும் ‘வாவ்’ தருணங்களின் படப்பிடிப்பும், எடிட்டிங்கும் அபாரம். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாய்ப் போகும் நிகழ்வுகளில் இடையே ஏற்படும் வழக்கமான காலேஜ் சண்டை. அது கொண்டுபோய் நிற்க வைக்குமிடம் காவல் நிலையம். கொஞ்சம் திணிக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், போலீஸ் ஸ்டேஷனில் வரும் காட்சிகள், வசனங்கள் எல்லாமே பிரமிக்கவைப்பவை.

முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர்கள். ஹீரோ, ஹீரோயின் என யாரையும் தனியாய்ப் பிரிக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சிக்கு முக்கியமானவர். க்ளைமாக்ஸில் தங்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு விடிவு தேடிக் கடக்கும் நெடிய இரவும் அதன் முடிவும் பாடலும் மயிர்க்கூச்செரிய வைக்கும் காட்சிகள். ஏனோ தெரியவில்லை, மிகவும் எமோஷனலாய் என்னை மாற்றிவிட்டது.

கல்லூரி கல்ச்சுரலில் கேமராவை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு, நான்கைந்து நாள்கள் கழித்து, எடுத்துப் போட்டு பார்த்து எடிட் செய்த படம் போல அத்துணை இயல்பான படப்பிடிப்பு. ஞானம் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு. அட்டகாசமான அபிரிட் சைனின் இயக்கம். மிக இயல்பான நடிப்பை நல்கிய நடிகர்கள் எனப் பெரும் குதூகல உணர்வை அளித்த படம் பூமரம்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 29 மா 2018