மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 மா 2018

சோனியாவைச் சந்தித்த மம்தா

சோனியாவைச் சந்தித்த மம்தா

கடந்த இரண்டு நாள்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று (மார்ச் 28) காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். மாநில கட்சிகளின் முன்னணிக்கு காங்கிரஸ் ஆதரவளித்தால் மட்டுமே பாஜகவின் அரசியல் பலத்தை எதிர்க்க முடியும் என்று அவர் சோனியாவிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் விதமாக, வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி. திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்கவில்லை என்று பின்னர் கூறினார்.

கடந்த 13ஆம் தேதியன்று, 19 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு, தனது இல்லத்தில் விருந்து அளித்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தி. இதில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பந்தோபாத்யாய கலந்துகொண்டார். இதனையடுத்து, சோனியாவுக்கும் மம்தாவுக்கும் இடையே நட்பு வலுவிழந்துவிட்டதாகத் தகவல் பரவியது.

இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணிக்கு அழைப்பு விடுத்தார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் (டிஆர்எஸ்) தலைவரும் தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர ராவ். அவரது வேண்டுகோளை முதல் ஆளாக ஆதரித்துப் பேசினார் மம்தா பானர்ஜி. மேலும், கடந்த 19ஆம் தேதியன்று அவரை கொல்கத்தாவுக்கு வரவழைத்துப் பேசினார். இருவரும் தங்களது கூட்டணியை ’கூட்டாட்சி முன்னணி’ என்று அறிவித்தனர். ஆனாலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் டிஆர்எஸ் உறுப்பினர்களோடு சேர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

கடந்த 26ஆம் தேதியன்று இரவு, திடீரென்று டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி. நேற்று முன்தினம் (மார்ச் 27) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அளித்த விருந்தில் கலந்துகொண்டார். திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம், சிவசேனா கட்சியைச் சார்ந்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். நேற்று மாலை பாஜகவில் இருந்துவரும் அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் நடிகர் சத்ருகன் சின்ஹாவைச் சந்தித்தார். மம்தாவின் முயற்சியினால், 2019 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதன் பிறகு, நேற்றிரவு சோனியா காந்தியை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார் மம்தா பானர்ஜி. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், தானும் சோனியாவும் எப்போதும் நல்ல நட்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தற்போது சோனியாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய மம்தா, “நாங்கள் இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம். எந்தக் கட்சி எந்தப் பகுதியில் வலுவாக இருக்கிறதோ, அங்கு சென்று எதிர்க்க வேண்டும். 2019 தேர்தலில் ஒன்றை எதிர்க்க இன்னொன்று என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்று கூறினேன். மாநில கட்சிகளின் முன்னணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டுமென்று தெரிவித்தேன். அப்போதுதான் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியும்” என்று அவர் கூறினார்.

கூட்டாட்சி முன்னணி தொடருமா, மூன்றாவது அணி என்பது தனித்துப் போட்டியிடுமா அல்லது காங்கிரஸுடன் இணைந்து சில பகுதிகளில் களமிறங்குமா என்ற கேள்விகள் சோனியா – மம்தா சந்திப்புக்குப் பிறகு எழுந்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

வியாழன் 29 மா 2018