மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

டிஜிட்டல் திண்ணை: வைகோ-சசிகலா சந்திப்பு... திமுகவில் சலசலப்பு!

டிஜிட்டல் திண்ணை: வைகோ-சசிகலா சந்திப்பு...  திமுகவில் சலசலப்பு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல், ஸ்டாலின் உட்பட அனைவருமே சென்று அஞ்சலி செலுத்தினார்கள். எடப்பாடியோ அதிமுகவில் இருந்து வேறு எவருமோ அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது. நடராஜனுக்கு நெருக்கமான நண்பராக இருந்த வைகோவும் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் வைகோ நேற்று மீண்டும் தஞ்சாவூர் போயிருந்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு சென்று பழ.நெடுமாறனை சந்தித்துப் பேசினார். பிறகு, நடராஜன் அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடத்துக்கு நெடுமாறனுடன் சென்று மீண்டும் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் நிற்கவில்லை. நேற்று இரவே சசிகலா தங்கியிருந்த நடராஜன் வீட்டுக்குப் போனார் வைகோ.

வைகோ வருகிறார் என்ற தகவல் சொல்லப்பட்டதும், சசிகலாவும் தயாராகவே காத்திருந்தார். சசிகலாவிடம் நடராஜன் பற்றிய பல நினைவுகளை சொல்லி கண்கலங்கினாராம் வைகோ. தனக்கும் நடராஜனுக்குமான நட்பு, கட்சி என்ற பாகுபாடெல்லாம் தாண்டியது என்றும், கடைசி வரையில் தனக்கு நல்ல நண்பராக நடராஜன் இருந்தார் என்று வைகோ சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட நண்பரான வைகோவின் பெயர் நடராஜன் படத்திறப்பு நிகழ்வு அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அதுபற்றியும் தனது வருத்தத்தை தனது பேச்சினிடையே சசிகலாவிடம் பகிர்ந்துகொண்டாராம் வைகோ.

அதற்கு சசிகலா, ‘உங்களை ஒதுக்க வேண்டும் என எங்களுக்கு எந்த நோக்கமும் இல்ல. உங்க நட்பும் எனக்கு நல்லாவே தெரியும். ஆனால், நீங்க இப்போ இருப்பது திமுக கூட்டணியில். எடப்பாடிக்கும் எங்களுக்கும் ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலுமே அக்காவுக்கு ஒரே எதிரி என்றால் அது திமுக தான். அவங்களோட நீங்க இருக்கும் போது உங்க பெயரை எப்படி அழைப்பிதழில் போட முடியும்? ஆரம்பத்துல நீங்க அக்காவை உடன்பிறவா சகோதரி என்றெல்லாம் சொல்லிட்டு இருந்தீங்க.ஆனால், இப்போ அப்படி இல்லையே... ஆயிரம்தான் இருந்தாலும் திமுக எங்களுக்கு எதிரிதானே...’ என்று சொன்னாராம் சசிகலா. திருமாவளவன், சீமான் ஆகியோர் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கிறார்கள். திமுக என்ற வகையில் அழைப்பிதழில் இருப்பவர் முன்னாள் எம்பியான எல்.கணேசன்தான். ஆனால் அவர் திமுக என்பதைத் தாண்டி சசிகலா குடும்பத்தின் உறவினர், மொழிப்போர் தியாகி என்ற அளவில் நடராஜனோடு நெருக்கமானவர். இதுபற்றியெல்லாம் சசிகலாவுக்கும் , வைகோவுக்கும் இடையிலான உரையாடல் நீண்டிருக்கிறது. கடைசியாக வைகோ கிளம்பும்போது, ‘ஜெயில் எவ்வளவு கொடுமையான இடம் என்பது எனக்கும் தெரியும். நீங்க உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க.. சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க..’ என்று சசிகலாவுக்கு அட்வைஸ் செய்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார். “ என்று முடிந்தது மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது. “ நடராஜன் படத் திறப்பு விழாவுக்கு முதலில் அடித்த அழைப்பிதழில், சீமான், வேல்முருகன் போன்ற சிலரின் பெயர்கள் இல்லையாம். அழைப்பிதழைப் படித்துவிட்டு சசிகலாவே சில கரெக்‌ஷன் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் சில பெயர்கள் சேர்ந்திருக்கிறது. அதற்குப் பிறகும் அழைப்பிதழில் வைகோ பெயர் இல்லை. இது ஒருபக்கம் இருக்க.. வைகோ- சசிகலா சந்திப்பு திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த எல்லோரும் போனோம். தளபதியும் கூட போனாரு. அத்துடன் இருக்க வேண்டியதுதானே... வைகோ மட்டும் எதுக்காக மறுபடியும் நடராஜன் சமாதிக்குப் போனாரு? சசிகலாவை சந்திச்சுப் பேசினாரு? வைகோ மறுபடியும் எதாவது இரண்டு மனசாக இருக்காரா?’ என்று திமுகவில் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதுபற்றியெல்லாம் மதிமுக வட்டாரத்தில் விசாரித்தால், ‘நடராஜன் இறுதி நிகழ்வு அன்று வைகோ கேரளாவில் நியூட்ரினோ விவகாரத்தில் அச்சுதானந்தனை பார்க்கப் போயிருந்தார். அதனால் தஞ்சை வரமுடியவில்லை. அதன் காரணமாகத்தான் நேற்று வந்துவிட்டுப் போயிருக்கிறார். இதில் வேறொன்றுமில்லை’ என்கிறார்கள்” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 29 மா 2018

அடுத்ததுchevronRight icon