மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: அமைச்சர்!

ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: அமைச்சர்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதன் பின்னணியில் திமுக இருப்பதாகக் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட முடியாது என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அப்பகுதியைச் சேர்ந்த குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையினால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இன்று (மார்ச் 28), ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் 45வது நாளாகத் தொடர்கிறது.

இந்த நிலையில், இன்று சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதனை முடித்துவிட்டு கிளம்பும்போது, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாகப் பேசிய ராஜேந்திர பாலாஜி, அந்த ஆலையை உடனடியாக மூட முடியாது என்று தெரிவித்தார்.

“ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பின்னரே, அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். ”திமுக ஆட்சியில் தானே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்ட்து. அதுதானே உண்மை. இன்று, நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்; அவர்கள் ஆட்சிக்கு வெளியில் இருக்கிறார்கள். அதனால், இதனை எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளது. இது தொடர்பாக, அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்களே” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் நாடகமாடுவதாகவும், மத்திய அரசில் காங்கிரஸ் பொறுப்பு வகித்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என்றும் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.

புதன், 28 மா 2018

அடுத்ததுchevronRight icon