மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்திக்கும் சசிகலா புஷ்பா

டிஜிட்டல் திண்ணை:  சசிகலாவை சந்திக்கும் சசிகலா புஷ்பா

வீணான எடப்பாடி அணியின் திட்டம்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் டெல்லி, சாணக்யபுரி காட்டியது. சற்று நேரத்தில் அப்டேட் ஆன ஸ்டேட்டஸ் இது.

“தமிழக எம்.பி.க்கள் பலருக்கும் எம்.பி. குடியிருப்பு இருப்பது நார்த் அவென்யூ பகுதியில்தான். முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் கடந்த ஞாயிறு இரவு டெல்லிக்கு வந்திருக்கிறார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கிறார். தமிழ்நாடு இல்லத்துக்கும் நார்த் அவென்யூவுக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு கிலோ மீட்டர்தான்.

திங்கள்கிழமை மாலையில் நார்த் அவென்யூவில் உள்ள ராஜ்சபா எம்.பி. சசிகலா புஷ்பா வீட்டுக்குப் போயிருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர்.

அவரை சசிகலா புஷ்பா அங்கே எதிர்பார்க்கவில்லை. காபி கொடுத்து உபசரித்திருக்கிறார். சசிகலா புஷ்பாவின் திருமணத்துக்காகக் கொண்டுவந்த கிஃப்டைக் கொடுத்து வாழ்த்து சொல்லியிருக்கிறார். ‘நீங்க கூப்பிடலைன்னாலும் நான் வாழ்த்திட்டுப் போகலாம்னுதான் வந்தேன்’ என்று சொன்ன அந்த முன்னாள் அமைச்சர், ‘நீங்க கல்யாணம் செய்துக்கிட்டது மகிழ்ச்சி. ஆனால், அரசியல்ல தப்பான முடிவை எடுத்துட்டீங்க. அதிமுகவை எதிர்த்து நின்ற சமயத்தில் உங்க மீது மரியாதை கூடியிருந்துச்சு. ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயிச்சதும் நீங்க அவரைப் போய் பார்த்து ஆதரவு தெரிவிச்சுட்டீங்க. உங்களை அம்மா அடிக்கிறதுக்கு காரணமாக இருந்ததே சசிகலாதான். மறுபடியும் அதே குரூப்ல போய் ஐக்கியமாகி இருக்கீங்க. இது உங்க பேரை டேமேஜ் பண்ணிடுச்சு.

நீங்க எப்படியும் எங்க பக்கம் வந்துடுவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தோம். இங்கே இருக்கும் எங்க ஆட்களும் உங்களோடு பேசியிருக்காங்க. உங்களை வெச்சுதான் தூத்துக்குடியில் கட்சியில் அடுத்த கட்ட திட்டங்களை செயல்படுத்தலாம்னு திட்டமிட்டிருந்தோம். நீங்க தினகரனை போய் பார்த்தது எங்களுக்கு பெரிய வருத்தம்தான். ஒருதடவை வந்து பார்த்துட்டு போய் அமைதியாகிட்டீங்க. அப்படியே இருந்துடுங்க. சட்டுன்னு ப்ளான் பண்ணி, இங்கே வந்துடலாம். அதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் நாங்க பார்த்துக்குறோம்; என்றவர், ‘உங்களோட நடவடிக்கைகள் எல்லாமே எங்களோட கண்காணிப்பில்தான் இருக்கு. அதை மறந்துடாதீங்க...’ என கடைசியாக எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.

அதற்கு சசிகலா, ‘நான் உங்க அணியோடு வரலாம்னு முன்பு நினைச்சது உண்மைதான். பேசியதும் உண்மைதான். ஆனால், ஆர்.கே.நகர்ல தினகரன் ஜெயிச்சதும் அவர் மேல எனக்கு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. அதிமுகவின் தொண்டர்களும், மக்களும் அவர் பக்கம்தான் இருக்காங்க. என்னை அடிச்சாங்க என்ற காரணத்துக்காக அவங்களை ஒதுக்குறது சரியாக இருக்காது. என்னோடது அதிமுக ரத்தம். நல்லதோ கெட்டதோ இனி இங்கேயே இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்காக அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கேன்னு நினைக்க வேண்டாம். சீக்கிரமே தமிழ்நாட்டுக்கு வந்து முழுவீச்சுல வேலையில் இறங்குவேன்’ என்று சொன்னாராம்.

முன்னாள் அமைச்சர் லேசாக டென்ஷன் ஆகியிருக்கிறார். ‘நாங்க இவ்வளவு சொல்லியும் நீங்க கேட்க மாட்டேங்குறீங்க... இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். நாளைக்கே உங்க வீட்டுக்கு ரெய்டு வந்தா என்ன செய்வீங்க?” என கேட்டாராம். அதற்கும் அசராத சசிகலா, ‘வந்தால் வரட்டுமே... பார்த்துக்குறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதுவரை அமைதியாக இருந்த சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி அப்போது பேசியிருக்கிறார். ‘சார் நீங்க வாழ்த்து சொல்ல வந்தது சந்தோஷம். அழைக்காமலேயே எங்க மேலே மரியாதை வெச்சு வந்திருக்கீங்க. அதுக்கு நிறைய நன்றி சொல்லணும். சசியோட அரசியல் பயணத்தில் தலையிட எனக்கே உரிமை இல்லை. நீ இங்கேதான் இருக்கணும்... இங்கேதான் வரணும் என்று சொல்ல உங்க யாருக்கும் உரிமை இல்ல. அமித் ஷாவுக்கு நான் தான் லீகல் பார்க்கிறேன். அவருகிட்ட நான் பேசிக்கிறேன். நான் அவருக்கு லீகல் விஷயங்களை டீல் பண்றேன் என்பதற்காக என் பொண்டாட்டியை நீ இந்த கட்சிக்குப் போகணும்னு நான் எப்படி சொல்ல முடியும்? அது அவங்களோட உரிமை. அதனால இப்படி ரெய்டு அது இதுன்னு பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் இனி வெச்சுக்காதீங்க...’ எனக் கொந்தளித்துவிட்டாராம்.

வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஒரு மாதிரி ஆகிவிட்டாராம். ‘சாரி சார்... மிரட்டுறதுக்கு நான் வரலை. மேல இருந்து சொல்லச் சொன்னாங்க. அதான் சொன்னேன். இனி அவங்க விருப்பம்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். ‘சும்மாவே சாமியாடும் சசிகலா புஷ்பாவுக்கு அவரது கணவர் உடுக்கையும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இனி சும்மா இருப்பாரா?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் அந்த முன்னாள் அமைச்சர்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“திருமணம் முடிந்த கையோடு தினகரனை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வருவதாக சசிகலா புஷ்பா கேட்டி ருக்கிறார். ‘முதல்ல சின்னம்மாவை போய் பார்த்து மன்னிப்பு கேளுங்க. அதுக்குப் பிறகு என்னைப் பார்க்க வரலாம். இப்போ அரசியல் தொடர்பாக யாரையும் அவங்க சந்திக்க கூடாது. பரோல் முடிஞ்ச பிறகு பரப்பன அக்ரஹாரா போய் பாருங்க. அவங்களை நீங்க பார்த்துட்டு வந்த பிறகு என்னை சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டாராம் தினகரன். அதனால் பரோல் முடிந்ததும், விரைவில் பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon