மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

விறுவிறுப்பாக முடிந்த பார் கவுன்சில் தேர்தல்!

விறுவிறுப்பாக முடிந்த பார் கவுன்சில் தேர்தல்!

பல கட்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ‘தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று (மார்ச் 28) அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்திருக்கிறது.

இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு நிறைவு பெற்றது. ஆனாலும் மாலை 5 மணியளவில் கூட ஏராளமான வழக்கறிஞர்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்ததால் அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்குப் பதிவு 5 மணிக்குப் பின்னும் சில நிமிடங்கள் நடைபெற்றது.

பார் கவுன்சில் தேர்தலில் மொத்தம் 192 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் 57, 675 வழக்கறிஞர்கள் வாக்களிக்கிறார்கள். பார் கவுன்சிலுக்கு மொத்தம் 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், ஒவ்வொரு வாக்காளரும் மொத்தமுள்ள 192 வேட்பாளர்களில் 25 பேருக்கு வாக்களிக்க வேண்டும். பெரிய அளவிலான பேலட் பேப்பரில் தங்களது விருப்பமான 25 பேர்களை தேர்வு செய்து வாக்களிக்கவே ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 7 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை ஆனது.ஒவ்வொருவரும் தங்களது சாய்ஸ் ஆன 25 பேர்களையும் மறந்துவிடுவோமா என்று செல்போனில் குறித்துக் கொண்டு வந்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஆடிட்டோரியத்தில் வாக்குப் பதிவு நடந்தது. மேலும் ஜார்ஜ் டவுன், எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 20 வாக்குச் சாவடி மையங்கள் சென்னையில் இயங்கின.

உயர் நீதிமன்றத்தில் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருக்கும்போதே... வேட்பாளர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள் வரிசையில் நிற்பவர்களிடம், தங்கள் நம்பரைச் சொல்லி இன்றும் கூட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். இதனைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ’போதும் சார்...போதும் சார்...’ என்று மைக்கில் சொல்லி அவர்களை தடுத்தனர். அப்போதும் வரிசையில் வாக்கு சேகரிப்பு தொடர்ந்தது. வாக்குப் பதிவு மையத்தில் இருந்து 30 மீட்டருக்கு முன்பே வாக்கு சேகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.

சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாக்கு செலுத்திவிட்டு வந்த வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

‘’மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய தேர்தல் என்பதால் இந்த பார் கவுன்சில் தேர்தலில் வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பலரும் ஆர்வமாக வந்து வாக்கு செலுத்தியுள்ளனர். மேலும் இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், அகில இந்திய பார் கவுன்சில், சர்ட்டிபிகேட் ஆஃப் பிராக்டிசிங் முறையைக் கொண்டு வந்துவிட்டதால், வாக்களித்த வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் பார்த்த முகங்களாகவே இருந்தனர். தேர்தலுக்கு மட்டுமே ஓட்டு போட வரும் வழக்கறிஞர்கள் பலர் இந்தத் தேர்தலில் காணாமல் போயிருந்தனர். இதுவே நல்ல விஷயம்’’ என்றனர் நம்பிக்கையாக.

உயர் நீதிமன்றத்தில் இன்று மாலை, வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ரிட்டனிங் ஆபீசர்ஸ்) வேட்பாளர்களையும், அவர்களின் ஏஜெண்ட்டுகளையும் வெளியேற்றிவிட்டு அதன் பிறகே வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைப்போம் என்று கூறினர். இதை பல வேட்பாளர்கள் எதிர்த்தனர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதில் உறுதியாக இருந்தனர். எனவே வாக்குப் பதிவு முடிந்தும், வாக்குப் பெட்டிகளை சீல் வைப்பதில் பிரச்னை எழுந்து, அது பதற்றமாக மாறி வருகிறது. இதுவே பார் கவுன்சில் தேர்தலின் இறுதிக்கட்ட பரபரப்பு!

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon