மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

கருணை இல்லம் மூடல்: யார் போட்ட உத்தரவு?

கருணை இல்லம் மூடல்: யார் போட்ட உத்தரவு?

பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மீண்டும் அதே கருணை இல்லத்திற்குத் திரும்பி வர விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த முதியவர்களில் 294 பேரை அரசு வேறு இல்லங்களுக்கு அழைத்துச் சென்றது. அவர்களை முறையாகப் பராமரிப்பதில்லை; நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை; இதனால் அவர்களில் 12 பேர் இறந்துவிட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், அனைவரையும் திரும்பவும் கருணை இல்லத்திற்கே கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று கருணை இல்ல நிர்வாக இயக்குநர் தாமஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அனைவரையும் கருணை இல்லத்திற்கே கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என நேற்று (மார்ச் 27) உத்தரவிட்டிருந்தனர். மேலும் மாவட்ட சமூக நல அதிகாரியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 28) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் முதியவர்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், கருணை இல்லத்திற்குத் திரும்பி வர யாரும் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், விளக்கம் சரியானதுதானா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அட்வகேட் கமிஷனர் சஞ்சய் மோகனை நியமனம் செய்தனர். மேலும் பிற இல்லங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில்தான் தங்கியுள்ளார்களா; அவர்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறார்களா; மருத்துவ சிகிச்சை முறையாகத் தரப்படுகிறதா என்று ஆய்வு செய்யவும் உத்தவிட்டனர். ஆய்விற்கு ஒரு மனநல மருத்துவர் மற்றும் கருணை இல்லத்தைச் சேர்ந்த ஒருவரையும் சஞ்சய் மோகன் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் யாருடைய உத்தரவின் பேரில் 294 பேரை வெளியேற்றவும், கருணை இல்லத்தை மூடவும் நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சமூக நல அதிகாரி சங்கீதா மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முறையாகப் பதிலளிக்காததால், எழுத்துபூர்வ விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் ஆணையிட்டனர்.

வழக்கறிஞர், ஆணையர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலும், அரசு அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையிலும் விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon