மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தமிழ் சினிமா: மோதல் வரை சென்ற பேச்சுவார்த்தை!

தமிழ் சினிமா: மோதல் வரை சென்ற பேச்சுவார்த்தை!

தமிழ் சினிமாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவிருக்கும் தற்போதைய வேலைநிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், இன்று (28.03.18) மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முந்தய சந்திப்புகளைவிட மிக மோசமான சூழலை அது உருவாக்கியிருக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி மற்றும் இதர தொழிலாளர் சம்மேளனங்கள் ஒரு அணியாகவும், தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை ஒரு அணியாகவும் சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் சந்தித்தனர். பேச்சுவார்த்தையாக இருந்த சந்திப்பு, வாக்குவாதம் வரை சென்று மோதல் நிலையையும் அடைந்ததாக சந்திப்பில் பங்குபெற்றவர்கள் தமிழ் சினிமா வட்டாரம் முழுவதற்கும் அவசரச் செய்தியை அனுப்பியிருக்கிறார்கள்.

சந்திப்புக்குச் செல்லாமல் வெளியிலிருந்து கவனிப்பவர்களோ, ‘பேச்சுவார்த்தை என்பது தீர்வு காண்பதற்கான ஒன்று. ஆனால், இரு தரப்பும் ஏற்கனவே ஒரு தீர்வுக்கு வந்துவிட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டால் அதன் முடிவு வேறெப்படி இருக்கும்’ என்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய கோரிக்கைக்குப் பணிந்துபோனால், தமிழ் சினிமாவை கையில் வைத்திருக்கும் அதிகாரம் நம்மைவிட்டுப் போய்விடும். பிறகு அவர்கள் சொல்வதைத்தான் நாம் செய்ய வேண்டும். எனவே, அவர்கள் கேட்கும் VPF (Visual Projection Fee) கோரிக்கைக்கு உடன்படக் கூடாது எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துவிட்டது. இதற்கு அடிப்படை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் ஆதரவு. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கை VPF பணத்தை தியேட்டர்காரர்களே கட்டிக்கொள்ள வேண்டும் என்பதாக மட்டும் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை எப்போதோ முடிந்திருக்கும். ஆனால், டிக்கெட் விற்பனையைக் கணினிமயமாக்கித் திரைப்படங்களின் அனைத்து வசூல் கணக்கையும் முறைப்படுத்த வேண்டும் என்ற விஷாலின் கோரிக்கைதான் இரு தரப்புக்குமிடையே முரண்பாடுகளை வளர்த்துவருகிறது.

ஒரு திரைப்படத்தின் மொத்த வசூல் கணக்கும் தெரிந்து, இடைத்தரகர்களுக்குச் செல்லும் பணம் தயாரிப்பாளர்களுக்கு வந்தால் தங்களுக்கு லாபம் எனத் தொழிலாளர்களும் தயாரிப்பாளர்கள் பக்கம் நிற்கிறார்கள். இவர்களது போராட்டம் பக்கம் திரும்பிய அரசின் கவனமும் தற்போது இவர்கள் மீது இல்லாததால், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பினர் முழு வேகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்க்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்த காலா ரிலீஸ் பிரச்சினையும் முடிந்துவிட்டது. தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வுகண்ட பிறகு படத்தை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று காலா தயாரிப்பு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதால், முதலில் திட்டமிட்டபடியே அடுத்த கட்டப் போராட்டத்தை (உண்ணாவிரதப் போராட்டம் எனச் சொல்லப்படுகிறது) தொடங்கலாம் என்ற யோசனையில் இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon