மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம்!

அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம்!

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அரசியல் சாசனம் தோற்றுவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த நவநீதகிருஷ்ணன், “மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம்” என்று ஆவேசமாகப் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தக் காலக் கெடு நாளையோடு (மார்ச் 29) முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திவருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திவருகின்றனர். அவர்களின் அமளி காரணமாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இன்று 17ஆவது நாளாகவும் அதிமுக எம்பிக்கள் மக்களவையில் காவிரி விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை ஏப்ரல் 1ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இந்நிலையில், துணை சபாநாயகர் பி.ஜெ. குரியன் தலைமையில் மாநிலங்களவை இன்று பிற்பகல் தொடங்கியது. அப்போது, ஒரு நிமிடம் பேசுவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று நவநீதகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார். துணை சபாநாயகர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து பேசிய நவநீதகிருஷ்ணன், “முக்கியப் பிரச்சினை தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி என்பது வெற்று சட்டகமாக உள்ளது. ஏனென்றால் நமது அரசியலமைப்புச் சட்டமே தோற்றுவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு மறுத்துவருகிறது. சட்டப் பிரிவு 141 என்பது அர்த்தமற்ற பிரிவாக உள்ளது.

அதிமுக எம்பிக்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வைக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்றால் அரசியலமைப்பு சட்டம் எதற்கு? சட்டத்தின் ஆட்சி என்ற கருத்து எதற்கு? தற்கொலை செய்துகொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என்று ஆவேசமாகப் பேசினார். அவரது பேச்சு காரணமாக அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களவையில் பேசும்போதும் மத்திய அரசை நவநீதகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். ”தமிழ்நாடு சட்டப்பேரவையின் அதிகாரத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசு அனுப்பிய எந்த மசோதாவையும் தங்கள் டேபிளில் மத்திய அரசு வைத்துக்கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்களை மத்திய அரசு மீறுகிறது. தமிழக அரசின் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததன் மூலம் நாடாளுமன்றம், தமிழக சட்டப்பேரவை, குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon