மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதியம்: அரசு முடிவை ஆதரிக்கும் நீதிபதி!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதியம்: அரசு முடிவை ஆதரிக்கும் நீதிபதி!

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானதுதான் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்தது.

இந்நிலையில் மத்தியஸ்தர் தலைமையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடைபெற்றுவந்தது.

இது தொடர்பான வழக்கு கடந்த மார்ச் 8ஆம் தேதி நீதிபதி மணிக்குமார், நீதிபதி கோவிந்தராஜ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள், ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் 2.44 காரணி ஊதிய உயர்வுதான் வழங்க முடியும். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது என்று வாதிட்டார்.

இதை விசாரித்த நீதிபதிகள், 0.13 காரணி உயர்வு குறித்து மத்தியஸ்தர் பத்மநாபன் முடிவை அறிவிக்க 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

இரு தரப்பினரிடமும் தொடர்ந்து நடத்தப்பட்ட மத்தியஸ்தரின் விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில், போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது மட்டுமின்றி பேருந்துகள் பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகள் உள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு தெரிவித்த 2.44 காரணியே போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்ற நீதிபதிகள், அதனை அரசிதழில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனர்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon