மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

பாஜகவினரைச் சந்தித்த மம்தா

பாஜகவினரைச் சந்தித்த மம்தா

பாஜகவில் எதிர்க்குரல் எழுப்பிவரும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சத்ருகன் சின்ஹா ஆகியோரை இன்று (மார்ச் 28) சந்தித்துப் பேசினார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நேற்று எதிர்க்கட்சியினரைச் சந்தித்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமையன்று (மார்ச் 26) டெல்லி சென்றார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த மிசா பாரதி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். நேற்றிரவு சரத் பவார் இல்லத்தில் நடைபெற்ற விருந்திலும் கலந்துகொண்டார் மம்தா.

இன்று (மார்ச் 28) மாலை 4.30 மணியளவில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் நடிகர் சத்ருகன் சின்ஹா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் மம்தா. கடந்த சில மாதங்களாக, இவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராகப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையனும் உடனிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மேல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மம்தா சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அக்கட்சிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்தும், வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இன்று இரவு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மம்தா சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சோனியாவின் இல்லத்தில் நடைபெற்ற விருந்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதீப் பந்தோபாத்யாய கலந்துகொண்டார். இதனால், சோனியாவுக்கும் மம்தாவுக்கும் இடையே பிரச்சினை நிலவுவதாகத் தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாகவே, கூட்டாட்சி முன்னணி குறித்த அறிவிப்பை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுடன் இணைந்து மம்தா வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சோனியா – மம்தா சந்திப்பு நிகழ்ந்தால் அது தேசிய அரசியலில் பலத்த அதிர்வை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இன்று மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் என்ற இடத்தில் வன்முறை நிகழ்ந்துள்ளது; இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர், மேற்குவங்கத்தில் தனது பணிகளைக் கவனிக்காமல் மம்தா பானர்ஜி டெல்லியை வலம்வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

”மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையும், அதனால் போலீசாருக்கு ஏற்பட்ட காயங்களும் அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜி பொறுப்பற்ற முறையில் பணியாற்றி வருவதைக் காட்டுகிறது. முதலமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும், அங்கு அவர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். அதனைச் செய்யாமல், அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மேற்கு வங்கம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் குறித்து மம்தா விவாதித்து வருகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon