மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

கௌதம் - நரேன்: யார் பக்கம் தவறு?

கௌதம் - நரேன்: யார் பக்கம் தவறு?

எந்த முன் அனுபவமும் இன்றி இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணிபுரியாமல், சினிமா ஆர்வத்தில் சொந்த முதலீட்டில் கார்த்திக் நரேன் இயக்கித் தயாரித்த முதல் படம் துருவங்கள் 16. இந்தப் படத்தின் வெற்றி மொத்தக் கோடம்பாக்கத்தையும் அவர் பக்கம் திருப்பியது. அதில் அதிகம் திரும்பியது கௌதம் மேனனின் முகம். உடனே அவரை அழைத்து அடுத்த படத்துக்கான கமிட்மெண்டை உறுதிசெய்தார்.

துருவங்கள் 16 வெளியான பின்பு கார்த்திக் நரேனுடன் இணையப் பெரிய நடிகர்கள் தரப்பிலிருந்து பல அழைப்புகள் வந்தன. அனைத்தையும் நிராகரித்தார். காரணம் சினிமாவுக்கு வருவதற்கு முன் இயக்குனர் கெளதம் மேனன் ரசிகராக இருந்தவர் நரேன். அவரே தன்னை இயக்குநராக ஒப்பந்தம் செய்ய அழைத்தபோது ஓடோடிச் சென்று ஒப்புக்கொண்டது இயல்பு. ஆனால், கௌதம் மேனன் என்ற மனிதரை தனது மனதை நிறைய வைத்த இயக்குநராக ரசித்தவரால், பேங்க் அக்கவுண்டை நிரப்பக்கூடிய தயாரிப்பாளராக ரசிக்க முடியவில்லை.

கெளதம் மேனன் தயாரிப்பில், பைனான்ஸ் விஷயங்களில் எப்படி இருப்பார் என்பதை கோடம்பாக்கமே கூப்பிட்டுச் சொன்னது நரேனுக்கு. முதல் பிரதி அடிப்படையில் படம் இயக்கித் தாருங்கள் எனப் பலரும் அவரைத் தொடர்புகொண்டபோது நரேன் அதனை அலட்சியப்படுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது திடீர் வெற்றி, அதற்கு மீடியா கொடுத்த முக்கியத்துவம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருந்தவரைக்கூட கெளதம் மேனன் கூறியதற்காக நரேன் தூக்கி எறிந்தார் என்றும் பேச்சு.

கௌதம் மேனனைப் பற்றிய எச்சரிக்கைகளைக் கேட்ட பிறகும் அவரைத் தயாரிப்பாளராகத் தேர்வு செய்தது யாருடைய தவறு என்பதுதான் இன்று கோடம்பாக்கத்தில் உலாவரும் சூடான கேள்வி.

கெளதம் மெளனம் கலைந்தால் உண்மைகள் உலகத்துக்குத் தெரியும். அதுவரை யாராலும் நியாயம் பேச முடியாது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon