மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ மறுதேர்வு!

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ மறுதேர்வு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்குக் குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என இன்று (மார்ச் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 17,574 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக 4453 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. கணிதத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று (மார்ச் 27) வாட்ஸ் அப்பில் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. அதே போல், கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற ப்ளஸ் 2 வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ் அப்பில் வெளியானதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பல மாணவர்களின் பெற்றோர்கள் வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்தவும், மறுதேர்வு நடத்தக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில், குறிப்பிட்ட பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதாரவியல் பாடத்திற்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கும் மறுதேர்வு நடத்தப்படும். இந்த மறுதேர்வுகளுக்கான தேதிகள் ஒரு வாரத்திற்குள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும். ஆனால், மறுதேர்வு டெல்லிக்கு மட்டுமா நாடு முழுவதுக்கும் பொருத்துமா என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தவில்லை.

சிபிஎஸ் இ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon