மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

சங்கம் தியேட்டருக்கு ரூ.50,000 அபராதம்!

சங்கம் தியேட்டருக்கு ரூ.50,000 அபராதம்!

நொறுக்குத் தீனிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த சங்கம் தியேட்டருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர் கார்த்திக் மாணிக்கம். 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சங்கம் தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளார். இடைவேளையின்போது தியேட்டரில் உள்ள கடையில் பாப்கான் மற்றும் சிக்கன் டிக்கா 140ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதற்கான அந்த தொகையை செலுத்தத் தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது கடைக்காரர் கார்டில் இருந்து 140 ரூபாய்க்கு பதிலாக 150 ரூபாய் எடுத்துள்ளார். கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தது குறித்து கடைக்காரரிடம் கார்த்திக் மாணிக்கம் கேட்டுள்ளார். ஸ்வைபிங் மெஷினுக்கான தொலை இணைப்பு,வங்கி பரிவர்த்தனை சேவைக் கட்டணம் ஆகியவற்றுக்குக் கூடுதலாக 10 ரூபாய் எடுக்கப்பட்டதாக கடைக்காரர் தெரிவித்துள்ளார். இது குறித்து கார்த்திக் மாணிக்கம் வங்கியைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அதுபோன்று கூடுதல் கட்டணங்களை வியாபார நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என வங்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அவர் சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்தில் புகார் அளித்தார். குறை தீர்ப்பு மன்றத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர் உயிரொலி கண்ணன் ஆகியோர் இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

தியேட்டரில் உள்ள சோனா ஃபுட்ஸ் கடை, பாதிக்கப்பட்ட கார்த்தி மாணிக்கத்துக்கு 50,000 ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். கூடுதலாக வசூலித்த 10 ரூபாயையும் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், அந்தத் தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், அன்றைய தேதியில் இருந்து 9% வட்டி போட்டு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜய் கோபால் என்பவர் 2016 ஜூன் மாதம், அங்குள்ள ஐனாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு சென்ற தண்ணீர் பாட்டிலைத் தியேட்டருக்குள் கொண்டு செல்ல, தியேட்டர் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் தியேட்டரில் 20 ரூபாய் விலையுள்ள தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஐனாக்ஸ் தியேட்டர் நிர்வாகத்தின் மீது, ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜய் கோபால் புகார் அளித்தார். 2017 ஏப்ரல் மாதம் இந்தப் புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ஐனாக்ஸ் தியேட்டருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon