மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

முடிவுக்கு வந்த விசாரணை!

முடிவுக்கு வந்த விசாரணை!

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பென்கிராஃப்ட் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம்.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட் செய்து கொண்டிருந்த பொழுது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பென்கிராஃப்ட் பந்தினை சொரசொரப்பான பொருள் கொண்டு சேதப்படுத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் இதற்கு தொடக்கமாக அமைந்தார். அவர் அந்த வீடியோ பதிவினை கண்டு அதில் உப்பு காகிதம் போல் ஒரு பொருளைக் கொண்டு பந்தினை அவர் சேதப்படுத்தி உள்ளார். அதனால் அந்த பந்து நன்கு பவுன்ஸ் ஆகும் வகையில் அதனை தயார் செய்ய முயற்சித்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி பந்தினை சேதப்படுத்திய கேமரூன் பென்கிராஃப்ட்டிற்கு அபராதம் மட்டும் விதித்தது, அவருடன் உறுதுணையாக இருந்த கேப்டன் ஸ்மித்திற்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்தது. ஆனால் அதனைத் தொடர்ந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியதால், இந்த சர்ச்சையில் சிக்கிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்களையும் விசாரணைக்காக மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே வரும் படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

எனவே மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கு பதிலாக புதிதாக மூன்று வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலியா சென்ற மூன்று வீரர்களிடமும் விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம், அவர்கள் செய்த குற்றத்தை உறுதி செய்துள்ளது. எனவே டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடைவிதித்துள்ளது. அது மட்டுமின்றி இருவரும் கேப்டனாக பதவியேற்க இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. கேமரூன் பென்கிராஃப்ட்டிற்கு ஒன்பது மாதங்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பல்வேறு தரப்பினரும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் குறித்து சந்தேகம் எழுப்பினர். ஆனால் இந்த மூன்று வீரர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும், டேரன் லேமன் பதவி விலகுவதாக வந்த தகவல் உண்மையல்ல என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்காக மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று தகவல் தெரிவித்த ஐபிஎல் அதிகாரி ராஜீவ் சுக்லா ஆஸ்திரேலிய வீரர்கள் இருவருக்கும் இந்த சீசனில் விளையாட அனுமதி மறுக்கபடுவதாக அறிவித்தார்.இதற்கு முன்னரே இருவரும் ஐபிஎல் அணிகளின் கேப்டன் பதவியிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon