மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கோதாவரி- தாமிரபரணி இணைப்பு: பாஜக குழு கோரிக்கை!

கோதாவரி- தாமிரபரணி இணைப்பு: பாஜக குழு கோரிக்கை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த கெடு நாளை (மார்ச் 29) முடிகிற நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த எவ்வித முன்னெடுப்பும் செய்யவில்லை. தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் மத்திய அரசை நோக்கி கண்டனக் குரல்களை எழுப்பி வரும் நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக பாஜக அமைத்த குழு இன்று (மார்ச் 28) மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்தித்தது.

மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தலைமையிலான இந்த குழுவில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக மாநில விவசாய அணித் தலைவர் விஜயராகவன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களோடு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் இணைந்து இன்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் சந்தித்தனர்.

அப்போது கட்கரியிடம் பாஜக குழுவினர் அளித்த மனுவில், கோதாவரியையும் தாமிரபரணியையும் இணைக்க வேண்டும் என்ற வித்தியாசமான கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இன்று தமிழக பாஜக காவிரிநதி நீர் குழுவினர் கட்கரியிடம் அளித்த மனுவில்,

‘’உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதுடன், தமிழகத்துக்குத் தேவையான காவிரித் தண்ணீரை முறைப்படி வழங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

காவிரி நதிநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வண்ணம், நிரந்தர ஒப்பந்தம் ஏற்படும் வகையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படாததால், தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்நிலை தொடராத வகையில் காவிரி நதி நீர் பங்கீட்டில் கர்நாடகத்தின் நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்ததோடு கோதாவரி தாமிரபரணி இணைப்பு குறித்தும் மனுவில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

’’தாங்கள் (கட்கரி) முயற்சி எடுத்து வரும் திட்டமான, கோதாவரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்துக்குக் கொண்டு வந்து, அதைத் திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி ஆறு வரை கொண்டு சேர்த்திடவேண்டும். ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் இந்தத் திட்டத்தை துரித்தப்படுத்த வேண்டும்’’ என்று மத்திய அமைச்சர் கட்கரியிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள் தமிழக பாஜக குழுவினர்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், ‘’காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon