மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

முன்ஜாமீன் கேட்கும் துணைவேந்தர் வணங்காமுடி

முன்ஜாமீன் கேட்கும் துணைவேந்தர் வணங்காமுடி

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த வணங்காமுடி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வணங்காமுடி துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை உட்பட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 95 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வணங்காமுடி வீட்டில் கிடைத்த ஆவணங்களில் பல்வேறு நபர்கள் போலியாக சட்டம் பயின்று பட்டம் வாங்கிய விபரம் வெளியேவந்தது.

சசிகலாவின் தம்பி ஜெயராமன் மற்றும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் உள்பட 74 மாணவர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்து சட்டம் பயின்றதாகவும் இவர்கள் அவனைவரும் முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பல்வேறு விஐபிகளின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எனக் கண்டறியப்பட்டது.

இப்படி முறைகேடாகப் படிப்பதற்கு அனுமதி அளிக்க லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக வணங்காமுடி மற்றும் அம்பேத்கர் பல்கலை பேராசிரியர்கள் ஜெய்சங்கர், சர்வாணி, பதிவாளர் பாலாஜி, துணை பதிவாளர் அசோக் குமார், நிர்வாக அதிகாரி ராஜேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வணங்காமுடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon