மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

விற்றுத் தீர்ந்த நீலகிரித் தேயிலை!

விற்றுத் தீர்ந்த நீலகிரித் தேயிலை!

குன்னூரில் நடந்த இந்த வாரத்துக்கான தேயிலை ஏலத்தில் 93 சதவிகிதம் அளவிலான தேயிலை விற்றுத் தீர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் தேயிலை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு கிட்டத்தட்ட 60,000 தொழிலாளர்கள் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை குன்னூரில் வாரந்தோறும் ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி குன்னூர் தேயிலை வர்த்தகர் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட விற்பனை எண் 12க்கான ஏலத்தில், விற்பனைக்காக வந்திருந்த தேயிலையில் சுமார் 93 சதவிகித அளவு விற்றுத் தீர்ந்தது. தேயிலையின் விலை சராசரியாகக் கிலோ ஒன்றுக்கு ரூ.95.49 உயர்ந்துள்ளது. சென்ற வார ஏலத்தில் இதன் விலை ரூ.94.08 உயர்ந்திருந்தது.

குளோபள் டீ புரோக்கர்ஸ் அமைப்பால் நடத்தப்பட்ட ஏலத்தில் ஹோம்டேல் எஸ்டேட் நிறுவனத்தின் தேயிலை விலை அதிகபட்சமாகக் கிலோ ஒன்றுக்கு ரூ.235 ஆக இருந்தது. சிடிசி ரகத் தேயிலைத் தூள் ஏலத்தில் ஹோம்டேல் எஸ்டேட் நிறுவனத்தின் இரண்டு ரகங்கள் அதிகபட்சமாக தலா ரூ.232 மற்றும் ரூ.231க்கு விற்பனையாயின. ஆர்தடாக்ஸ் வகைத் தேயிலை ஏலத்தில் சாம்ராஜ் நிறுவனத் தேயிலை விலை கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.266 ஆக இருந்தது. இதர நிறுவனங்களின் தேயிலை 200 ரூபாய்க்குக் குறைவாகவே ஏலம் போயின.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon