மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு : ஸ்டாலின்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு : ஸ்டாலின்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

15 அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 18,775 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நடந்துவருகிறது. இதில் ஆளுங்கட்சி தரப்பில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. ஒருசில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்நிலையில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதற்கு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 29) வெளியிட்ட அறிக்கையில், “ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தலை ஏதோ ’இடைத்தேர்தல்களையும்’ ’உள்ளாட்சித் தேர்தல்களையும்’ நடத்தும் ஜனநாயகத்திற்கு எதிரான அராஜக பாணியில் தமிழக அரசு நடத்துவதையும், அதற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் விரும்பித் துணைபோவதையும் திமுக கண்டிக்கிறது.

நிர்வாகத்தின் இமாலயத் தோல்வி மற்றும் ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுகவினர் கூட்டுறவு இயக்கத்தையே சீரழித்து அதன் அடிப்படை நோக்கத்தையே பாழடித்துவிட்ட நிலையில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் வாக்குகளைப் பெற முடியாது என்பதால், குறுக்கு வழியில், வேட்பு மனு தாக்கலின்போதே, கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரிகளாக இருப்பவர்கள், அதிமுகவினர் தூண்டுதலினால், பகிரங்கமாக ஈடுபட்டுள்ள ஜனநாயக விரோத தேர்தல் நடைமுறைகள் வெட்கித் தலைகுனியவைக்கின்றன” என்று விமர்சித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக நடைபெறுகின்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் திமுகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதும், ஏற்றுக் கொண்டதற்கு ஒப்புகை ரசீது கொடுக்காமல் ஓடி ஒளிவதும், ஒருதலைப்பட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்புகளை ஒட்டிவிட்டு கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரிகள் தலைமறைவாகிவிடுவதும் தமிழக அரசின் ’கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தும்’ லட்சணமாக மாறியிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், “தேர்தல் அதிகாரிகளை வழிநடத்த வேண்டிய மாநில கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் தமிழக அரசுக்கும், அதிமுகவினரை ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணாகத் தேர்ந்தெடுப்பதற்கும் நாணமின்றித் துணை போவது ’சுதந்திரமான தேர்தல்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் பல முக்கிய தீர்ப்புகளை அப்பட்டமாக மீறும் விதமாக அமைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“தேர்தல் நடக்கும் இடங்களுக்குத் தேர்தல் அதிகாரிகளே வராமல் ’தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்’ பட்டியல் கடலூர் போன்ற மாவட்டங்களில் ஒட்டப்பட்டு, ’தேர்தல் அதிகாரிகளைக் காணவில்லை’ என்று திமுக மாவட்டச் செயலாளரின் சார்பில் காவல் துறையில் புகார் மனுவே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படிக் கொடுக்கப்பட்ட புகார்களின் மீதும், அதிமுகவினரின் அராஜக ஆட்டபாட்டங்கள் குறித்துக் கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல் துறையும், கூட்டுறவு தேர்தல் ஆணையமும் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு அதிமுகவினரின் தேர்தல் முறைகேடுகளுக்கும் சட்ட துஷ்பிரயோகங்களுக்கும் துணைபோவதற்கு எதிர்காலத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை நிச்சயம் வரும்” என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

புதன் 28 மா 2018