மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சாமி தரிசனம் : கோர்ட் உத்தரவு!

சாமி தரிசனம் : கோர்ட் உத்தரவு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையானதாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

அதே நேரம், சமயபுரம் மாரியம்மன் கோயில் தரிசனத்தில் பாகுபாடு பார்க்கப்படுவதாக திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்.முருகேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ”கட்டணம் செலுத்துபவர்கள் அருகில் நின்று தரிசனம் செய்யலாம்; இலவச தரிசன வரிசையில் வருபவர்கள் தூரமாக நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும் என்ற முறை இருந்துவருகிறது. பாகுபாடான இந்த முறையை மாற்றி உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 28) நடைபெற்றது. அப்போது, ”திருச்சி சமயபுரம் கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசனம் என பாகுபாடு காட்டக் கூடாது. இரு வரிசைகளில் வந்தாலும், ஒரே தூரத்தில் நின்று சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon