மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சட்டப்படிப்பு : ஜெயக்குமாருக்கு விவேக் விளக்கம்!

சட்டப்படிப்பு : ஜெயக்குமாருக்கு விவேக் விளக்கம்!

தன்னுடைய சகோதரிக்கு சிங்கப்பூர் குடியுரிமை உள்ளது எனவும், அவர் மூலமாகவே உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தே சட்டப்படிப்பில் சேர்ந்தேன் என்றும் ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் சட்டப்படிப்பில் சேர்வதில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்திருந்தது. அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் ஸ்பான்சர் கோட்டாவில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் சேர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து நேற்று பேசியிருந்த அமைச்சர் ஜெயக்குமார், 'அந்தக் குடும்பமே மோசடிக் குடும்பம். சட்டப்படிப்பில் சேர விவேக் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் கட்டாயம் சிறைக்குச் செல்வார்' என்று கூறினார்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து இன்று (மார்ச் 28) அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயா டிவியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், "சட்டப் படிப்பைத் தொடர எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், முறையாகவும் நியாயமாகவும் பயில வேண்டும் என்பதற்காகவே நான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். என் உடன்பிறந்த சகோதரி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். என் சகோதரி மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில், முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்தே கல்லூரியில் சேர்ந்தேன். தற்போதும் அது சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறி இருந்தால் அப்போதே எனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

"படிப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பினாலும், வேறு சில வேலைகளாலும் படிப்பைத் தொடர முடியாத நிலையில், நான் சட்டப் படிப்பிலிருந்து விலகி விட்டேன். நிலைமை அப்படி இருக்க நான் முறைகேடாக சீட் வாங்கியதாக வேண்டுமென்றே சிலர் விஷமத்தனமான தகவல்களை உண்மைக்கு மாறாகப் பரப்புகின்றனர். இது அடிப்படை உண்மைக்கு மாறானது" என்றும் குற்றம் சாட்டியுள்ளார் விவேக்.

மூத்த அமைச்சராக இருக்கும் ஜெயக்குமாரோ இதுகுறித்து உண்மையை விசாரிக்காமல் கடுமையான வார்த்தைகளால் என்னையும் என் குடும்பத்தையும் நாகரீகமற்ற முறையில் விமர்சித்துள்ளார். என்னைக் கைது செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். என் மீது தவறு இருந்தால் ஜெயக்குமார் அவர்கள் தாரளமாக என்னைக் கைது செய்து கொள்ளட்டும். எத்தகையை நடவடிக்கையையும் நான் சட்டப்பூர்வமாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்ட விவேக், என் பெயரைச் சொல்லி என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்" என்று அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon