ஜப்பானில் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் முறையில் இயங்கும் இந்த ரோபோ நாய் போன்ற உருவத்தில் பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவின் தலை, மூக்கு மற்றும் வால் பகுதியில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் மூலம் மனிதர்களின் நிலையை அது அறிந்துகொள்கிறது.
இது குறித்து முதியோர் காப்பகத்தில் உள்ளவர்கள் கூறுகையில், ரோபோக்களிடம் தங்களால் பேச முடிகின்றது. இந்த ரோபோக்கள் மனிதனாக இருந்தால் எந்த மாதிரியான மனிதன் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்; ஏனெனில், அந்தளவிற்கு மனிதர்களுடன் பேசுவது போலவே ரோபோக்களுடன் பேசியது இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்த ரோபோ பேச்சுத்துணையாக இருக்கிறது. சிறுசிறு உதவிகள் செய்வது, விளையாடுவது போன்ற செயல்களிலும் இது ஈடுபடுகிறது.
"முதியோர்களின் உதவிக்கு ரோபோவைப் பயன்படுத்துவது நமக்கு கிடைத்த வாய்ப்பு. பல ஜப்பானியர்கள் ஒரு நேர்மறையான முறையில் இதை பார்க்கின்றனர். மற்ற நாடுகளும் இந்த முறையைப் பின்பற்றும்" என பொருளாதார அமைச்சகத்தின் ரோபோ கொள்கை இயக்குநர் கூறினார்.