மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

முத்தலாக் மசோதா : மோடி பெருமிதம்!

முத்தலாக் மசோதா : மோடி பெருமிதம்!

மக்களவையில் என்ன நடக்கிறதோ அதேபோன்று மாநிலங்களவையிலும் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லாதது என்று குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகத்தில் முக்கிய இடத்தை மாநிலங்களவை பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இருந்து 63 எம்பிக்கள் ஓய்வு பெறுகின்றனர். இதை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று (மார்ச் 28) ஆற்றிய பிரிவு உபசார உரையில், “மாநிலங்களவையில் இருந்து 60க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிந்து அடுத்த சில வாரங்களில் விடை பெறுகிறார்கள். அவர்களுக்குப் பிரியாவிடை அளிப்பது, அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிப்பது மிகவும் முக்கியம். இதற்கு நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்திச் செல்வது எதிர்க்கட்சிகளின் கடமை மட்டுமல்ல, ஆளும்கட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது.

மக்களவையில் என்ன நடக்கிறதோ அது மாநிலங்களவையிலும் நடக்க வேண்டும் என அவசியமல்ல. பல்வேறு துறைகளில் தனித்துவமாக விளங்கியவர்கள், திறமைமிகு ஆளுமை படைத்தவர்கள் தங்களின் பங்களிப்பை அளிக்கும் சிறந்த அவையாகும். ஜனநாயகத்தில் முக்கியமான இடத்தை மாநிலங்களவை பெற்றிருக்கிறது. கொள்கை உருவாக்கத்தில் மாநிலங்களவை முக்கிய பங்கு வகிக்கிறது.

விடைபெற்றுச் செல்லும் எம்பிக்கள் முத்தலாக் மசோதா குறித்து விவாதம் நடக்கும்போது, தங்களின் கருத்துக்களைக் கூற முடியாமல் செல்வது துரதிருஷ்டமாகும். முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தின்போதும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. முத்தலாக் மசோதா நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்காற்றப்போகிறது. அதில் ஓய்வு பெறும் எம்பிக்களின் பங்கும் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பல உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு தேர்வு செய்யப்பட்டு வரலாம், சிலர் வரமுடியாமல் போகலாம், சிலர் மீண்டும் அவைக்கு வருகிறார்கள். அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதா விவாதத்தில் பங்கேற்க முடியும்.

அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குப் பின், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்க முடியவில்லையே என்று வருத்தம் கூட ஏற்படலாம்.

ஓய்வு பெறும் உறுப்பினர்கள் சமூக சேவையில் இன்னும் அதிகமாக ஈடுபடுத்தி முக்கிய இடத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன். உங்களுக்காக என் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும். முக்கிய பிரச்சினைகளில் உங்களின் எண்ணத்தை என்னோடு பகிர்ந்துகொள்ளத் தயங்காதீர்கள்” என்று கூறினார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon