மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

எதுவும் சொல்ல முடியாது!

எதுவும் சொல்ல முடியாது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசம் முடிந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவற்றை அமைக்க 6 வார காலம் அவகாசம் வழங்கிய நிலையில், நாளையோடு (மார்ச் 29) அந்தக் கால அவகாசம் நிறைவடைகிறது. எனினும் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் கால அவகாசம் முடியும்வரை காத்திருப்போம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று (மார்ச் 28) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “இப்போதைக்கு எதையும் கூற முடியாது. குறிப்பிட்ட நாள் வரை பொறுத்திருப்போம். உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் 6 வார காலம் வரை பொறுத்திருப்போம். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம். இன்னும் நாட்கள் இருக்கிறது. அந்தக் கால அளவு வரை காத்திருப்போம். நிச்சயம் மத்திய அரசு ஒரு நல்ல தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு. அதனை மத்திய அரசு உணர்ந்து செயல்படும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதல்வர் இன்று மாலை மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon