மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

இளம் இயக்குநரை வஞ்சித்த கௌதம்?

இளம் இயக்குநரை வஞ்சித்த கௌதம்?

இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் நரகாசூரன் படத்தின் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்

'துருவங்கள்’ 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் தற்போது அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கிவருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கௌதம் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெய்ன்மென்ட்’ மற்றும் ஷ்ரத்தா என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் தயாரிப்பில் இரு இயக்குநர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவிவந்ததை இருவருமே வெளியில் கூறியுள்ளனர்.

நேற்று முன் தினம் கார்த்திக் நரேன், “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என ட்விட்டரில் யார் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு (மார்ச் 27) கௌதம் மேனன் சிஎஸ்கே கிரிக்கெட் அணி பற்றியும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை பாராட்டியிருந்தார். அதோடு சில இளம் இயக்குனர்கள் படத்தை உருவாக்கிவிட்டு அதைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள் என்று பதிவு செய்திருந்தார்.

அதை கார்த்திக் நரேன் ரீ ட்விட் செய்து, ”பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவுசெய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்" என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸிஃபி இணையதளத்திற்கு கார்த்திக் அளித்த பேட்டியில், “நரகாசுரன் படத்திற்காக அவர் பணம் செலவு செய்யவில்லை. முழுவதும் நாங்களே செய்தோம். ஆனால் இந்தப் படத்தைத் தயாரிப்பதாகக் கூறி கடன் பெற்று தன்னுடைய எனை நோக்கி பாயும் தோட்டா, துருவநட்சத்திரம் படங்களுக்கு செலவு செய்துள்ளார். படத்தில் நடித்த அரவிந்த் சாமி உள்ளிட்ட நடிகர்களுக்கு சம்பளம் கூட இன்னும் வழங்கவில்லை. ஆனால் அரவிந்த் சாமி அதைப் பொருட்படுத்தாது டப்பிங் பேசியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் தரப்பில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கார்த்திக் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon