மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

காவலருக்கு அரிவாள் வெட்டு!

காவலருக்கு அரிவாள் வெட்டு!

சென்னையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே பூந்தமல்லி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக அன்பழகன் பணியாற்றிவருகிறார். இவர் நேற்று இரவு குமணன்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர்.

காவலர் அன்பழகன் மூன்று பேரையும் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். அவர்கள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பதைக் கண்டறிய புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் மூன்று பேரும் காவலர் அன்பழகனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டியிருக்கிறார்கள் . இதைத் தடுக்க முயன்றதில் காவலருக்கு கை கால் முகம் என உடம்பில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் விழுந்தன.

அன்பழகனின் செல்போனை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அன்பழகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவலரைத் தாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் தாக்குதல் நடத்திய 3 பேரும் யார் என்பது குறித்து கண்டறியப்பட்டது. அவர்கள், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார், ரஞ்சித், பன்னீர்செல்வம் ஆகிய 3 ரவுடிகள் என்பதும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon