மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

வடகொரியா அதிபரின் ரகசியப் பயணம்!

வடகொரியா அதிபரின் ரகசியப் பயணம்!

வடகொரிய அதிபரான கிம் ஜோங் வுன் தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக ஒரு வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவிலிருந்து ரயில் மூலமாக, நேற்று முன்தினம் (மார்ச் 26) அவர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு வந்து சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை மூலமாக உலகநாடுகளை பீதிக்குள்ளாக்கி வருபவர் வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் வுன். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல், தொடர்ந்து கிம்முக்கு எதிராகப் பேசி வருகிறார். அவருக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார் கிம். இந்த நிலையில், கடந்த மாதம் ட்ரம்பையும் கிம் ஜோங் வுன்னையும் சந்திக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தென்கொரியா. இந்த திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒத்துக்கொண்டன. இதனையடுத்து, வரும் மே மாதம் ட்ரம்ப் – கிம் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, தென்கொரியாவுக்கு கிம் செல்வார் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 26) சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு வடகொரியா அதிபர் கிம் ஜோங் வுன் ரகசியமாக வந்து சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.

வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் இருந்து பெய்ஜிங்குக்கு, ஆயுதப் பாதுகாப்புடன் கூடிய பச்சை வண்ணமுடைய ரயிலில் சீனாவுக்கு கிம் வந்தார் என்று சொல்லப்படுகிறது. இதனை வெளிக்காட்டும் விதமாக, ஒரு வீடியோவொன்றை நிப்பான் டிவி என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயில் வருவதும், அதனைத் தொடர்ந்து ஸ்டேஷன் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதும், திடீரென்று மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ சில கார்கள் வந்து செல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் முக்கியத் தலைவர்கள் வந்து சென்றால் மட்டுமே தியானென்மன் சதுக்கத்தில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும், கடந்த திங்கள் கிழமையன்று அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன், கிம் ஜோங் வுன்னின் தந்தை கிம் ஜோங் வுல்லும் இதேபோல வடகொரியாவிலிருந்து சீனாவுக்கு ரயிலில் வந்து சென்றுள்ளார். அப்போது, அவர் தங்கிய விடுதியிலேயே தற்போது கிம்மும் தங்கினார் என்று கூறப்படுகிறது. தனது தந்தையின் மறைவினை அடுத்து அதிபராகப் பதவியேற்ற கிம், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியாவை விட்டு வேறெந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை. அதனால், அவரது ரகசிய சீனப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

அது மட்டுமல்லாமல், பல பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் சீனாவுடன் வணிக உறவைத் தொடர்ந்து வருகிறது வடகொரியா. ஆசிய – பசிபிக் பகுதியில் அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டு, தனது வல்லமையை வெளிக்காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது சீனா. இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்பைச் சந்திப்பதற்கு முன்னதாக சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துள்ளார் கிம். உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், இது சர்வதேச அரசியலில் பலத்த அதிர்வை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கிம்மின் சீனப் பயணம் குறித்து வடகொரியாவோ, சீனாவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. அதேநேரத்தில் கிம்மின் இயல்பை அறிந்தவர்கள் எவரும் இந்த தகவலை மறுக்கவும் இல்லை.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon