மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

தமிழகத்தில் திமுக ஆட்சி: மம்தா பானர்ஜி

தமிழகத்தில் திமுக ஆட்சி: மம்தா பானர்ஜி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒருபகுதியாக டெல்லி சென்றுள்ள அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மிசா பாரதி உட்பட பலரை நேற்று (மார்ச் 27) சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வங்கி ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளின் பாதிப்பால் நாட்டு மக்கள் பாரதிய ஜனதாவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஆட்சி அதிகாரத்திலிருந்து அக்கட்சி வெளியேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

"தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும் சக்தியாக உருவெடுக்கும். அதே போல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார். மாயாவதியின் வெற்றியிலும் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அடுத்த முறை பாரதிய ஜனதாவால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றோரை மம்தா இன்று (மார்ச் 28) சந்தித்துப் பேசவுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று மாலை மம்தா சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon