மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

என் கனவு நனவாகியது: கார்த்திக் சுப்புராஜ்

என் கனவு நனவாகியது: கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தை நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்தே உருவாக்கினேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா, ஷங்கர் இயக்கத்தில் 2.0 எனத் தொடர்ச்சியாக படங்களில் நடித்துவரும் ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தைக் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்துப் பேசியுள்ள கார்த்திக் சுப்புராஜ், "2014இல் நான் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம்தான், ரஜினிகாந்துடன் நான் பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவை நனவாக்கியுள்ளது. ஜிகர்தண்டா கதையை நான் எழுதும்போதே ரஜினிகாந்தை மனதில் வைத்துத்தான் எழுதினேன். பாபிசிம்ஹா கதாபாத்திரத்தில் ரஜினியைத்தான் பொருத்திப் பார்த்தேன். ஆனால் புதுமுக இயக்குநராக இருந்த எனக்கு ரஜினிகாந்தை எப்படி அணுகுவது என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினி சார் படத்தைப் பார்த்துவிட்டு படத்தை வெகுவாகப் பாராட்டியதோடு தன்னையே திரையில் பார்த்ததுபோல் உணர்ந்ததாகக் கூறினார். அப்போது நான் அவரிடம் அவரை நினைத்தே அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியதாகக் கூறினேன். அதற்கு அவர், 'நீங்கள் என்னை அணுகியிருக்க வேண்டும். எப்போது உங்களிடம் எனக்கான ஸ்க்ரிப்ட் உருவாகிறதோ அப்போது என்னிடம் சொல்லுங்கள்' என்று சொன்னார்.

ஆனாலும் கார்த்திக் சுப்புராஜுக்கு நம்பிக்கை வரவில்லையாம். ரஜினிகாந்த் பா.ரஞ்சித்துடன் இணைந்து கபாலி படம் செய்த பிறகே நம்பிக்கை வந்ததாகவும் தெரிவிக்கிறார். "இப்போது ரஜினி ஸாருக்காக ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி செய்திருக்கிறேன். இது மிகவும் யதார்த்தமான கதையாக இருக்கும். ஆனால் ஒரு ரஜினி படத்துக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும். இது ஒரு கற்பனைப் புனைவுக் கதை. ரஜினி ஸாருக்கு இந்த ஸ்க்ரிப்ட் ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம். படத்தில் ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்த இளம் இயக்குநரின் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதையடுத்து மகிழ்ச்சியும் பயமும் சேர்ந்தே இவருடன் பயணிக்கிறதாம். "இது எனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. என் கனவை நனவாக்கும் வாய்ப்பு. அதற்கு முழு நீதி செய்ய வேண்டும். அதை அவ்வளவு எளிதானதாக நான் கருதிவிட முடியாது" என்று தன் எண்ணத்தை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon