மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

வெற்றிக்கு அச்சாரம் : ஸ்டாலின்

வெற்றிக்கு அச்சாரம் : ஸ்டாலின்

திமுகவின் வலிமையைப் பறைசாற்றிய ஈரோடு மண்டல மாநாடு திமுகவின் வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திமுக மண்டல மாநாடு கடந்த 25, 26ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தி 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகச் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் புதிய ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் முன்வைத்தார். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு திமுக ஆட்சியமைக்கும், அதன் பிறகு திமுகதான் 30 வருடங்கள் வரை ஆட்சியில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் மாநாட்டின் வெற்றி குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "ஈரோட்டில் நடந்த மண்டல மாநாடு, மாநில மாநாட்டை மிஞ்சும் அளவுக்கு மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. மாநாட்டுக்கு அலை அலையாய் தொண்டர் பட்டாளமும் இளைஞர் படையும் பெண்களும் பொதுமக்களும் ஆர்ப்பரித்துவந்த காட்சி திராவிடப் பேரியக்கமான திமுகவின் வலிமையை, ஒளிமயமான எதிர்காலத்தை, பறைசாற்றியது.‘சாலைகள் அனைத்தும் ரோம் நோக்கி’ என்று வரலாற்றில் சொல்லப்படுவது உண்டு. அதுபோல ‘சாலைகள் அனைத்தும் ஈரோடு நோக்கி’ என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளது திமுக மண்டல மாநாடு" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மேற்கு மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வியால்தான் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது. அந்த மேற்கு மண்டலத்தின் நிர்வாகிகள் அனைவரும் தோளோடு தோள் நின்று ஒற்றுமையோடு பணியாற்றி அரசியல் எதிரிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர். இந்த ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எதிர்கலாத்தில் நாம் அடையப்போகும் வெற்றிக்கு இது அச்சாரமாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழகத்தின் நலன்களை காக்கவும், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமையைப் பாதுகாக்கவும் 50 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. காவிரி பற்றி சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “எத்தனையோ பணிகள், குடும்பச் சூழல்கள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. தலைவர் கருணாநிதி வாழும் காலத்திலேயே திமுக ஆட்சியை மீண்டும் உருவாக்கி அவருக்குக் காணிக்கையாக்குவோம்" என்றும் தெரிவித்தார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon