மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கத் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நேற்று (மார்ச் 27) உத்தரவிட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனேஷ். இவரது மகன் ஹரீஷ் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார். 2011ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி மாலை கே.கே. நகரில் ட்யூஷனுக்குச் சென்றார். ட்யூஷன் முடிந்து இரவு வீடு திரும்புகையில் சாலிகிராமம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மாணவரின் தந்தை ஸ்ரீனேஷ் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மின்வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால் என் மகன் ஹரீஷ் இறந்துவிட்டார். இது குறித்து, மின் வாரியத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன்,“மின் வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால்தான் மனுதாரரின் மகன் இறந்துள்ளார். எனவே, மனுதாரருக்குத் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தொகையை, 2011இலிருந்து கணக்கிட்டு, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 2 மாதங்களில் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

மழைக்காலங்களில் மின்வயர்களை முறையாகக் கண்காணித்துப் பராமரிக்க மின் வாரிய அதிகாரிகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். மின் வயர் அறுந்தால் தானாக மின்சாரம் தடைப்படப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon