மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகக் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. அந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள்வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டுவந்த 192 டிஎம்சி நீரை 14.75 டிஎம்சி குறைத்து, 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை ஆறு வாரங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 29) நிறைவடைகிறது. எனினும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளன. மேலாண்மை வாரியம் அமைப்பதற்குக் கர்நாடகத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதைச் சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது எனத் தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தச் சூழ்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர் தலைமையில், தமிழக அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவுடன் நேற்று மாலை 5 மணிக்கு டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

அந்தக் கூட்டத்தில் நீதிமன்றம் விதித்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை எனில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon